சிவகாசி: சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியில் வெடிவிபத்து ஏற்பட்டதையடுத்து கடந்த 5 நாட்களாக மூடப்பட்டருந்த 700 பட்டாசு ஆலைகள் இன்று திறக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே முதலிப்பட்டியில் சுமார் 10 ஏக்கரில் அமைந்துள்ள ஓம் சக்தி பட்டாசு ஆலையில் கடந்த 5ம் தேதி மதியம் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 38 பேர் பலியாகினர், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை, விருதுநகர், சிவகாசி, சாத்தூர் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்தையடுத்து துக்கம் அனுஷ்டிக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 700 பட்டாசு ஆலைகள் கடந்த 5ம் தேதி முதல் நேற்று வரை தொடர்ந்து 5 நாட்களாக மூடப்பட்டிருந்தன. இதனால் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர்.
இந்நிலையில் விருதுநகர், சிவகாசி, ஏழாயிரம் பண்ணை, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள 700 பட்டாசு ஆலைகள் 5 நாட்களுக்குப் பிறகு இன்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டு ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.
மீண்டும் விபத்து எதுவும் நடக்காமல் இருக்க தொழிலாளர்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு ஆலைக்கு கிளம்பினர்.
இந்நிலையில் பட்டாசு ஆலை தொழிலாளர்கள் கூறுகையில்,
பட்டாசு ஆலைகளை உரிமையாளர்கள் குத்தகைக்கு விடுகின்றனர். அவ்வாறு குத்தகைக்கு எடுப்பவர்கள் குறுகிய காலத்தில் அதிக பட்டாசுகள் தயாரிக்க வேண்டும் என்று எங்களுக்கு அதிக வேலை கொடுக்கின்றனர். அதனால் கவனமாக, நிதானமாக பட்டாசு தயாரிப்பதற்கு பதில் அவசர, அவசரமாக தயாரிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு அவசரத்தில் பணியாற்றும்போது தான் விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அதனால் ஆலை உரிமையாளர்கள் அதை லீசுக்கு விடுவதை நிறுத்த வேண்டும் என்றனர்.


Click it and Unblock the Notifications