
பெரும்பாலானோரின் அன்றாட உணவுகளில் ஒன்றாகிவிட்ட கோழி முட்டைக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகும் மையமாக நாமக்கல் கோழி மற்றும் முட்டை மார்கெட் உள்ளது. வாரத்திற்கு 3 நாள் முட்டை விலை நிர்ணயம் செய்த நிலையில் தற்போது தினமும் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த 20 நாட்களுக்கு முன்பு வரை ஒரு முட்டை ரூ.2.80க்கு விற்கப்பட்டது. இது தினமும் 5 பைசா முதல் 7 பைசா வரை படிப்படியாக உயர்ந்து நாமக்கல்லில் நேற்றைய நிலவரப்படடி ஒரு முட்டை விலை ரூ.3.60 பைசாவில் இருந்து ரூ.3.65 பைசாவாகவும், பிற இடங்களில் மொத்த விலை ரூ.3.80 பைசாவில் இருந்து ரூ.3.85 பைசாவாகவும் உயர்ந்தது.
இதனால் சில்லரை விற்பனை கடை, பெட்டிக்கடைகள் மற்றும் கிராமப்புற கடைகளில் ஒரு முட்டை ரூ.4 முதல் ரூ.4.25 வரை விற்கப்பட்டது. கோழித்தீவன விலை இரண்டு மடங்காக உயர்ந்ததே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாமக்கல் பகுதியில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு தற்போது அதிக அளவில் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
குளிரூட்டப்பட்ட கன்டெய்னர்களில் கப்பல் மூலம் முட்டைகள் அனுப்பப்படுகின்றன. இந்த ஏற்றுமதியும் தமிழகத்தில் முட்டை விலை உயர காரணமாக இருக்கிறது. இனி குறைந்தபட்ச முட்டை விலை ரூ.3.50க இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. விநாயகர் சதுர்த்தி, தசரா விழா போன்றவற்றால் தமிழகத்தின் சில இடங்களில் முட்டை விலை குறைய வாய்ப்புள்ளது.
இருப்பினும் வடமாவட்டங்களில் குளிர் காலம் தொடங்கிவிட்டால் அங்கு முட்டை நுகர்வு அதிகரிக்கும். இதனால் இங்கு பண்டிகை காலமாக இருந்தாலும் முட்டை விலை குறைய வாய்ப்பில்லாமலும் போகலாம்.


Click it and Unblock the Notifications