ஈரோடு: ரூ.5.65 கோடி மோசடியில் ஈடுபட்டதாக புகார் எழுந்த ஈரோடு சுவி ஈமு பார்மஸ் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையை தலைமையிடமாக கொண்டு சுவி ஈமு பார்மஸ் என்ற நிறுவனம் இயங்கி வந்தது. தமிழகம் முழுவதும் கிளைகளை அமைத்த அந்நிறுவனம், பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்று ஈமு கோழி பண்ணை அமைத்து கொடுத்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பொதுமக்களிடம் இருந்து முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட மற்ற ஈமு கோழி நிறுவனங்களை போல, சுவி ஈமு பார்மஸ் நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டது. இதனால் தமிழகம் முழுவதும் 500க்கும் முதலீட்டாளர்கள், சுவி ஈமு பார்மஸ் நிறுவனம் மீது புகார் அளித்தனர்.
இது குறித்து கோவையை சேர்ந்த ஆறுச்சாமி(58) என்பவர் கொடுத்த புகாரின் பேரில், ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். சுவி ஈமு நிறுவனம் இதுவரை ரூ.5 கோடியே 65 லட்சம் பணத்தை மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஈமு பார்மஸ் நிறுவன உரிமையாளர் சங்கர், ஊழியர்கள் வடுகப்பட்டி சந்திரன், பெருமாநல்லூரை சேர்ந்த ஆனந்தன், பெருந்துறையை சேர்ந்த சுதாகரன், சிவகிரியை சேர்ந்த ஜீவா, காங்காயத்தை சேர்ந்த கலைவாணன் ஆகிய 6 பேரையும், போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 6 பேரும், கோவை பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


Click it and Unblock the Notifications