
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :
2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய ‘தானே' புயலால் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பலர் தங்களது வீடுகளை இழந்தனர். பயிர்கள் சேதமடைந்து, மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. பயிர்களை இழந்த விவசாயிகளுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிவாரண தொகுப்பை முதல்வர் ஜெயலலிதா வழங்கியதோடு, வீடு இழந்த மக்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் கட்ட ரூ. 1,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும் முதல்வர் உத்தரவிட்டார்.
‘தானே' புயலின் தாக்கத்தில், கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. இந்த தொழில் நிறுவனங்களுக்கு புத்துணர்வு கொடுத்து, மீண்டும் செயல்பட வழிவகை செய்யும் வகையில், கடலூர் மாவட்டத்தில் உள்ள 2004 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் பெறும் வகையில் ரூ.12 கோடியே 92 லட்சத்து 51 ஆயிரம் நிதி உதவியும், விழுப்புரம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 53 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் புத்துணர்ச்சி பெற்று, மீண்டும் செயல்படுவதற்கு ஏதுவாக ரூ. ஒரு கோடியே 32 லட்சத்து 96 ஆயிரம் நிதி உதவியும் ஆக மொத்தம் 2,057 சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன் அடையும் வகையில் ரூ.14 கோடியே 25 லட்சத்து 47 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications