
வீடுகளுக்கு வினியோகிக்கக்கூடிய சமையல் எரிவாயு சிலிண்டர்கள் ஆண்டுக்கு 6 மட்டுமே மானியத்துடன் வழங்கப்படும் என்றும், அதற்கு மேல் தேவைப்படும் சிலிண்டர்களை மானியம் இல்லாமல் வெளிச்சந்தை விலைக்கு வாங்கிக் கொள்ளலாம் என்றும் கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து மானியம் இல்லாத சமையல் எரிவாயு விலை, மாதந்தோறும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த மாதத்துக்கான, வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மானியம் இல்லாத சமையல் கியாஸ் விலை, சிலிண்டருக்கு ரூ.26.50 உயர்த்தப்படுவதாகவும், இதனால் அதன் விலை ரூ.922 ஆக உயர்வதாகவும் வியாழக்கிழமை காலையில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விலை உயர்வை நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு நேற்று இரவு திடீரென அறிவித்தது. இதனால், முந்தைய மாத விலைக்கே இந்த சிலிண்டர் கிடைக்கும். ஆனால் வணிக நிறுவனங்களுக்கு வழங்கப்படும் மானியம் இல்லாத சிலிண்டருக்கு விலை உயர்வு நீடிக்கும் என்று கூறப்படுகிறது. இத்தகவலை பெட்ரோலிய அமைச்சக அதிகாரி ஒருவர் அறிவித்தார்
மத்திய அரசின் இந்த திடீர் முடிவுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. மானியம் இல்லாத சிலிண்டர் விலை அடிக்கடி உயர்த்தப்படுவதற்கு கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் திமுக, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வெளியில் இருந்து ஆதரவு அளிக்கும் மாயாவதி, முலாயம் சிங் யாதவ் ஆகியோரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். இதன் காரணமாகவும் இரவோடு இரவாக உயர்த்தப்பட்ட விலையை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
குளிர்கால கூட்டத் தொடரில் எதிர்கட்சிகள் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளும் இந்த பிரச்சினையை எழுப்பும் என்று நினைத்து மத்திய அரசு இந்த விலை உயர்வை நிறுத்திவைத்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications