
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
அனைத்துத் துறைகளிலும் பெண்கள், ஆண்களுக்கு சரிநிகர் சமமாக பணியாற்றி வருகிறார்கள். மகளிர் சொந்தமாக தொழில் செய்து, பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தின் அடிப்படையில் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களால் மகளிர் சுயஉதவிக் குழு இயக்கம் 1991-92ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இன்று தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இந்த திட்டம் பரந்து விரிந்து மகளிர் வாழ்வில் பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
தற்பொழுது மகளிர் சுய உதவிக் குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்கள் மூலம் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த பொருட்களின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டும், இப்பொருட்களை மாநில, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்காகவும் மாநில வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கம் ஒன்றினை மாநில அளவில் உருவாக்கிடவும், இதற்காக 15 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கங்களின் பணிகள் மக்களை சென்று அடைவதை உறுதி செய்யும் வண்ணம், இவற்றின் பணிகளை மேன்மைப்படுத்த இந்த நிதியாண்டில் ஒரு மாவட்டத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 31 மாவட்டங்களில் உள்ள மாவட்ட அளவிலான வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்களுக்கு 77 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும் தற்பொழுது செயல்பாட்டிலுள்ள மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்களின் பணிகள், புதியதாக துவங்கப்பட உள்ள மாநில வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
மாநில வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கத்துடன், மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனைச் சங்கங்களின் பணிகள் ஒருங்கிணைக்கப்படுவதன் மூலம், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் சர்வதேச அளவில் சந்தைப்படுத்தப்பட்டு, அவற்றின் விற்பனை அதிகரிப்பதுடன், அவர்களின் வாழ்க்கைத்தரம் உயரவும் வழிவகுக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications