
தூத்துக்குடி, ராமேஸ்வரம், குமரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மீனவர்கள் பிடித்து வரும் இறால்கள், கணவா மீன்கள் உள்ளிட்டவற்றை ஏற்றுமதியாளர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து பதப்படுத்தி அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றனர். இவை பெரும்பாலும் தூத்துக்குடியில் உள்ள கடல் உணவு தொழிற்சாலைகளில் பதப்படுத்தப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த ஆலைகளில் மீன்களை சுத்தம் செய்யவும், அங்குள்ள குளிர்பதன நிலையங்களில் மைனஸ் 24 டிகிரி உறை நிலையில் மீன்களை பதப்படுத்தி வைக்கவும் நிலத்தடி நீர் தேவைப்படுகிறது. இதற்காக ஓட்டப்பிடாரம், திருச்செந்தூர் வட்டாரங்களில் இருந்து நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வந்தது. தற்போது நிலத்தடி நீரை எடுக்க தூத்துக்குடி கலெக்டர் ஆசிஷ் குமார் தடை விதித்துள்ளார். இதனால் கடந்த ஒரு மாத காலமாக மீன் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலைகள் முடங்கியுள்ளன. இதையடுத்து கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், கல்மேடு, காயல்பட்டிணம், மறவன்மடம் உள்ளிட்ட பகுதிகளில் 18 மீன் உணவு பதப்படுத்தும் ஆலைகள் செயல்படுகின்றன. நாள் ஒன்றுக்கு ஒரு ஆலையில் 20 முதல் 40 டன் வரை இறால் மீன்கள் மீனவர்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு வந்தன. நிலத்தடி நீர் எடுக்க விதிக்கப்பட்ட தடையால் மீன் உணவு பதப்படுத்தும் தொழில் முடங்கியுள்ளது. இதனால் இனி இறால் மீன்களை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்பு இல்லை என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். கொள்முதல் இல்லாத நிலையில் மீன்கள் பிடித்தும் கூட அவற்றுக்கு போதிய வருவாய் இல்லாததால் தூத்துக்குடியிலிருந்து கோடியக்கரை வரை பெரும்பாலான மீனவர்கள் நேற்று முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications