
தமிழகத்தில் கடந்த ஆண்டு பருவ மழை சரிவர பெய்யாததால் கடும் வறட்சி நிலவுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள பாசன குளங்களில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் நிலவும் வறட்சி காரணமாக மிளகாய் வத்தல் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை விலை உயரும் என்று கூறப்படுகிறது.
தமிழத்தில் உள்ள புகழ்பெற்ற வத்தல் மார்க்கெட்டுகளில் சங்கரன்கோவிலும் ஒன்று. வறட்சி காரணமாக சங்கரன்கோவில் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து இல்லாத நிலை ஏற்பட்டு இருக்கிறது. வரும் மாசி மாதம் முதல் மார்க்கெட்டிற்கு வத்தல் வரத்து இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆந்திரா மாநிலத்தில் இருந்து தொடர்ந்து வத்தல் வந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் சங்கரன்கோவில் மார்க்கெட்டில் ஒரு குவிண்டால் வத்தல் ரூ.5,200ல் இருந்து ரூ. 5, 600 வரை விற்பனை செய்யப்பட்டது.
தற்போது தமிழக வத்தல் வரத்து இல்லாததால் மிளகாய் வத்தல் விலை உயர்ந்துள்ளது. இதனால் நடப்பு வாரம் ஒரு குவிண்டால் வத்தல் ரூ. 5,500ல் இருந்து ரூ. 6,300 வரை விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக தமிழக வத்தல் உற்பத்தியில் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் 20 சதவீதம் உற்பத்தி மிளகாய் வத்தல் மட்டுமே மார்க்கெட்டிற்கு வரும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் வத்தலுக்கு தட்டுப்பாடு இல்லாத அளவில் ஆந்திரா மாநில வத்தல் தமிழகத்திற்கு வந்து கொண்டிருக்கும் என்றும், ஆனால் மிளகாய் வத்தல் விலை குவிண்டாலுக்கு ஆயிரம் ரூபாய் வரை உயரக்கூடும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications