
டெல்லியில் நடந்த பொதுத் துறை வங்கிகளின் தலைவர்கள் மற்றும் நிதித்துறை அமைப்புகளின் தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது,
2013-14ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளின் பணியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ரூ.14,000 கோடி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
கருப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்றுவதாகக் கூறி, இந்தியாவின் தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்ஸிஸ் வங்கிகள் சட்டவிரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக வந்த புகார்கள் குறித்து விசாரணை துவங்கியுள்ளது என்றார்.
முன்னதாக வாராக் கடன்கள் குறித்து அவர் கூறுகையில், இந்திய பொருளாதாரத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு வர தொழில்கள் சிறப்பாக நடக்க வேண்டும் என்பதால்தான் தொழில்துறைக்கு வங்கிகள் கடன் அளிக்கின்றன. ஆனால், வராக் கடன்கள் மூலமாக பொருளாதாரம் பின்தங்கிய நிலையை அடையக் கூடும்.
கடந்த 2011ம் ஆண்டு மார்ச் மாதம் வாராக் கடன்களின் மொத்த மதிப்பு ரூ.71,080 கோடியாக இருந்தது. 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் வாராக் கடன்களின் மதிப்பு ரூ.1.55 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.
எனவே வாராக் கடன்களை குறைக்கவும், கடன்களை அளிக்கும் போது மேலும் கவனமாக செயல்படவும் வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications