ஆர்பிஐயின் கவர்னராகிய சுப்பாராவின் பணிக்காலம் வரும் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைகிறது. கடந்த ஓராண்டு காலமாக கழுகைப் போன்ற கூரிய அணுகுமுறையுடன் பணியாற்றி வந்த திரு சுப்பாராவ் அவர்கள் இந்தியாவின் மத்திய வங்கியின் முக்கியப் பொறுப்பில் இருப்பதை அரசு இயந்திரம் மற்றும் தொழிற்துறைகளில் உள்ள பெரும்பாலானோர் விரும்பவில்லை.
ஆனால், திரு சுப்பாராவ் அவர்களுக்கு கட்டாயம் பணி நீட்டிப்பு வழங்கப்பட வேண்டும் என்பதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. இவற்றுள் சில காரணங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.

சுப்பாராவை ஆட்டுவிப்போர் யாருமில்லை:
பணி நீட்டிப்பு யோசனைக்கு பிரதானமாக விளங்கக்கூடிய முழு முதற்காரணம் யாதெனில், சுப்பாராவ் தனக்குத் தானே முதலாளியாக இருப்பது தான். பணவீக்கத்தை எதிர்த்துப் போராட வேண்டும் என்று அவர் முடிவெடுத்து விட்டால், அவ்வாறே செய்வார். கடந்த ஆண்டின் பிற்பகுதியில், ஆர்பிஐ, வட்டி விகிதங்களை மட்டும் விட்டு வைத்திருந்த வேளையில், நிதியமைச்சர் சிதம்பரம், "வளர்ச்சி என்பதும் பணவீக்கத்துக்கு நிகரான சவால்கள் நிறைந்ததே. அரசாங்கம் வளர்ச்சியோடு தொடர்புடைய சவால்களை தனியாகத் தான் எதிர்கொள்ள வேண்டுமென்றால், அதனை நாங்கள் தனியாகவே எதிர்கொள்கிறோம்" என்று கூறினார்.
இவ்வாறு நிதியமைச்சர், தொழிற்துறை மற்றும் அரசு இயந்திரங்களைச் சேர்ந்தோர் அனைவரும் கடும் அதிருப்தி கொண்டிருந்ததைப் பற்றி சுப்பாராவ் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை. அரசாங்கம் மற்றும் தொழிற்துறை அழுத்தம் கொடுத்த போதும், அதை பொருட்படுத்தாது அவர், வட்டி விகிதங்களைக் குறைக்காமல் பணவீக்கத்துக்கு எதிராக போராடப் போவதாகக் கூறி ஹோதாவில் இறங்கினார்.
43 மாத காலகட்டத்தில் குறைவான பணவீக்கம்:
சிபிஐ பணவீக்கம் உயர்ந்து காணப்படுவதால், உணவு பணவீக்கமும் உயர்வாகவே காணப்படுகிறது. ஆனால், தற்போது வீழ்ச்சிப் பாதையில் பயணிக்கும் டபிள்யூபிஐ பணவீக்கம், மே மாதத்தின் போது, கடந்த 43 மாத காலத்தில் முதன் முறையாக 4.7 சதவீதம் வரை குறைந்தது. வட்டி விகிதங்களைக் குறைக்காமல் அதே அளவில் வைத்திருக்க முடிவு செய்த ஆர்பிஐயின் நிலைப்பாடு தற்போது பயனளித்துள்ளது; பணவீக்கமும் குறைய துவங்கியுள்ளது.
வளர்ச்சியை விலையாகக் கொடுத்து ஆர்பிஐ, பணவீக்கத்தை எதிர்த்து போராடியிருப்பதாகக் கூறப்படலாம்; ஆனால் இந்தியாவைப் பொறுத்த வரையில் குறைவான வளர்ச்சி விகிதங்கள், உயர்வான வட்டி விகிதங்களுக்கு அப்பாற்பட்ட பல காரணிகளையும் கொண்டிருப்பதாகவும் சிலர் வாக்குவாதம் செய்கின்றனர்.
ரூபாய் மதிப்பை உயர்த்த சிறப்பாக போராடி வருகிறார்:
ஆர்பிஐ தனது சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் வங்கி அமைப்பிலிருந்து லிக்விடிட்டியை இறுக்கிப் பிடித்திருக்கலாம்; ஆனால் இந்நடவடிக்கைகளின் விளைவாக வரலாறு காணாத அளவான 61.21 புள்ளிகள் வரை சென்ற ரூபாய் மதிப்பு, தற்போது 58 புள்ளிகளாகக் குறைந்திருக்கிறது. சுப்பாராவ், தங்க இறக்குமதிகளை குறைப்பது மற்றும் வங்கி அமைப்பில் இருந்த லிக்விடிட்டியை சுருக்குவது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம், தனது அனுபவத்தைக் கொண்டு, ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியை எதிர்த்துப் போராடி வருகிறார்.
புதிதாக ஒருவரை நியமிக்கப்படுவது அபாயகரமானதாக இருக்கலாம்:
பொதுத் தேர்தல்கள் இன்னும் சில மாதங்களில் வரக்கூடியதான இன்றைய சூழலில் பழுத்த அனுபவம் வாய்ந்த ஒருவருடன் தொடர்வதே ஆர்பிஐக்கு நன்மையளிக்கும். தற்போதைய ஆட்சிக்காலத்தின் கடைசி சில மாதங்களில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம்; அத்தகைய சூழலில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துதல், வளர்ச்சியை மேம்படுத்துதல், பணவீக்கம் மற்றும் ரூபாயின் வீழ்ச்சி ஆகியவற்றுக்கு எதிராக போராடுதல் போன்ற பெரும்பாலான விஷயங்கள் ஆர்பிஐயை நம்பியே இருக்கும்.
பொருளாதார முனையைப் பொறுத்தவரையில் தடுமாற்றமானதொரு நிலைமையில் தற்போது இந்தியா இருப்பதனால் ஆர்பிஐயின் தலைமைப் பொறுப்பில் ஒரு பழுத்த அனுபவசாலி இருந்தே ஆக வேண்டியது காலத்தின் கட்டாயம். எனவே கவர்னர் சுப்பாராவின் பணியை நீட்டிப்பது மிகச் சிறந்த முடிவாகும்.


Click it and Unblock the Notifications