மும்பை: முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், யு.கே நிறுவனம் ஒன்றுடன் கைகோர்த்து, பிரத்யேகமான சிக்கன் ரெஸ்டாரன்டை இந்தியா முழுவதும் தொடங்க திட்டமிட்டு வருகிறது. வருடத்துக்கு சுமார் 30% அளவிலான வளர்ச்சியைக் கொண்டிருக்கும் துரித சேவை உணவகம் (க்யூஎஸ்ஆர்) என்ற நிறுவனத்தின் முலம் இந்தியாவில் பெரும் உணவு வர்த்தகத்தை உருவாக்க முடியும் என அம்பானி நம்புவதால் இப்பிரத்யேகமான திட்டத்தை அவர் கையில் எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
சுத்தமான சைவத்தை விரும்பும் அம்பானியின் இந்த முடிவு, வணிகத் தீர்மானங்களுக்கும் தனிநபரின் உணவுப் பழக்கவழக்கம் மற்றும் வாழ்க்கை முறைக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகிறது.
சிக்கன் கேம் ஃபர்ஸ்ட்
"சிக்கன் கேம் ஃபர்ஸ்ட்" என்ற பெயரில் வழங்கப்படவுள்ள இந்த ரெஸ்டாரன்ட் செயின், உலகப்பிரசித்தி பெற்றுள்ள ரெஸ்டாரன்டு கேஎஃப்சி-க்கு (கென்டகி ஃப்ரைடு சிக்கன்) நேரடிப் போட்டியாளராக களத்தில் குதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டூ சிஸ்டர்ஸ் ஃபுட்ஸ் இந்தியா
ஆர்ஐஎல், டூ சிஸ்டர்ஸ் ஃபுட் குழுமத்தைச் (2SFG) சேர்ந்த டூ சிஸ்டர்ஸ் ஃபுட்ஸ் இந்தியா நிறுவனத்தில் (டிஎஸ்எஃப்ஐ) சுமார் 45% ஈக்விட்டி பங்குகளை கையகப்படுத்தியுள்ளது. யு.கேயின் மூன்றாவது மிகப்பெரும் உணவு நிறுவனமான 2எஸ்எஃப்ஜி, கோழி இறைச்சி, செம்மறி ஆட்டிறைச்சி, மீன், பேக்கரி பண்டங்கள் மற்றும் குளிரூட்டப்பட்ட பொருட்களின் சில்லறை வணிகம், உணவு சேவை மற்றும் உணவு உற்பத்தி பிரிவினருக்கு வழங்கி வருகிறது.
எஞ்சியுள்ள 55% பங்குகள்
ஆர்ஐஎல், வெளிப்படையாக அறிவிக்கப்படாததொரு தொகையை செலுத்தி ரிலையன்ஸ் ரீடெயில் மூலம் இப்பங்குகளை கைக்கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 55% பிரிட்டிஷ் தொழிலதிபரான ரஞ்சித் சிங் போபாரன் என்பவரால் நிறுவப்பட்ட 2எஸ்எஃப்ஜி நிறுவனத்தின் வசமே உள்ளது.
ரிலையன்ஸ் ரீடைல்
ரிலையன்ஸ் நிறுவனத்தின் டூ சிஸ்டர்ஸ் ஃபுட்ஸ் இந்தியா (டிஎஸ்எஃப்ஐ) ஆரம்பத்தில் குளிரூட்டப்பட்ட மற்றும் உறைய வைக்கப்பட்ட உணவுப் பொருட்களை அதன் உணவு & மளிகை கிளைகளில் (ரிலையன்ஸ் ரீடைல்) வழங்கும்.
பிரத்யேக மெனு
பின்னர் இந்திய சுவைக்கு ஏற்ற வண்ணம் அதன் மெனுவை பிரத்யேகமாக வடிவமைப்பதன் மூலம் இதர போட்டியாளர்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்ட முடிவு செய்து தொடங்கவுள்ள "சிக்கன் கேம் ஃபர்ஸ்ட்" என்ற அதன் ரெஸ்டாரன்ட் செயினை முழுமூச்சுடன் அமைத்து, சுமார் 7000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உணவு சேவைகள் சந்தையை ஒரு கை பார்க்கத் திட்டமிட்டுள்ளது. ஆர்ஐஎல் மற்றும் 2எஸ்எஃப்ஜி ஆகியோருக்கு அனுப்பப்பட்ட இ-மெயிலுக்கு உரிய பதில் பெறப்படவில்லை.
உணவு ஆராய்ச்சிக் கூடம்
இந்த திட்டத்தை உறுதிப்படுத்தும் வண்ணம், இந்த வளர்ச்சித் திட்டத்துக்கு நெருக்கமான ஒரு அதிகாரி, சிக்கன், மீன் மற்றும் இறைச்சிப் பொருட்களை செயல்படுத்தும் ஒரு பிரத்யேக நிலையம் ஒன்றை இந்த கூட்டு குழுமம் அமைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் அவர் "ரிலையன்ஸ் ரீடெயில் புதிய பொருட்களின் உற்பத்திக்கு ஆதரவு அளிக்கும் வண்ணம் நவீனமயமானதொரு உணவு ஆராய்ச்சிக் கூடத்தில் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2எஸ்எஃப்ஜி நிறுவனம்
பிர்மிங்ஹாமில் அமைந்துள்ள 2எஸ்எஃப்ஜி நிறுவனம், போபாரன் அவர்களால் 1993 ஆம் ஆண்டு நிறுவப்பட்டு, பல்வேறு கையகப்படுத்துதல்கள் மூலம் வளர்ச்சியடைந்து, தற்போது யு.கேவில் 36 உற்பத்தி நிலையங்களும், நெதர்லாந்தில் 8, அயர்லாந்தில் 5, போலந்தில் 1 என விரிவடைந்துள்ளது. கடந்த வருடத்தில் சுமார் மூன்று பில்லியன் பவுண்ட்கள் வரை வருடந்தர விற்பனையைக் கொண்டிருந்த இக்குழுமம், 24,000 -க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணியமர்த்தி, சன்டே டைம்ஸின் டாப் ட்ராக் 100 -இல் 19-வது இடத்தைப் பிடித்த பெருமையையும் பெற்றுள்ளது.
30% வளர்ச்சி
தற்சமயம் சுமார் 3,400 கோடி ரூபாய் பெறுமானமுள்ள உள்நாட்டு க்யூஎஸ்ஆர் என்றழைக்கப்படும் துரித உணவு சந்தையில், சுமார் 63% வரையிலான மொத்த சந்தைப் பங்குகளைக் கொண்டுள்ள உலகளாவிய ப்ராண்ட்கள், சிறிய நகரங்களில் விரிவாக்கம் செய்வதன் மூலம் சுமார் 30% வரையிலான வளர்ச்சியைக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications