மும்பை: நான்கு மற்றும் மூன்று சக்கர வாகன தயாரிப்பாளரான எய்சர் மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்குகள் நல்ல விலையேற்றம் அடைந்ததை அடுத்து அந்நிறுவனம் சந்தை மூலதனத்தின் அடிப்படையில், டாப் 100 நிறுவன தரவரிசை பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இந்நிறுவனத்தின் பங்குகள் 6 விழுக்காடு உயர்ந்து ரூபாய் 5,295 என்ற விலைக்கு விற்கப்பட்டது. முதலீட்டுச் சந்தை மந்தமாக இருப்பினும் கடந்த ஒரு வாரத்தில் இந்நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து 20 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில், மும்பை பங்குச்சந்தையின் விவரங்கள் படி 7 விழுக்காடாக இருந்த இதன் பங்குகள் வளர்ச்சி இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமாக, அதாவது இந்த வருடத்தில் மட்டும் 82 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டிய அதிக ஆர்வம், இந்த பங்குகள் விலையேற்றம் அடைய காரணமாக இருந்தது. சென்ற வருடம் செப்டம்பர் மாதத்தை ஒப்பிடும்போது 9.08 விழுக்காடாக இருந்த வெளிநாட்டு அமைப்புசார் முதலீடுகள் இந்த வருட செப்டம்பர் மாதத்தின் போது 19 விழுக்காடாக உயர்ந்திருந்தது.
ரூபாய் 14,302 கோடி சந்தை மூலதனத்துடன் எய்சர் மோட்டோர்ஸ் நிறுவனம் மதிப்புமிக்க நிறுவங்கள் பட்டியலில் 88வது இடத்தை பிடித்துள்ளது. இந்நிறுவனம் இந்த ஆண்டின் துவக்கத்தில் ரூபாய் 7,841 கோடி சந்தை மூலதனத்துடன் 144வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்வானது, முன்னணி துரித நுகர்வு பொருட்கள் தயாரிப்பு நிறுவனமான மாரிகோ (ரூபாய் 13,917 கோடி), தனியார் வங்கியான எஸ் பேங்க் (ரூபாய் 13,448 கோடி) மற்றும் அரசு நிறுவனமான பேங்க் ஆப் இந்தியா (ரூபாய் 13,056 கோடி) ஆகியவற்றை பின்னுக்குத்தள்ளி எய்ஷர் நிறுவனத்தை முன்னிலையில் வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications