சென்னை: ஜப்பானை சேர்ந்த இசுசூ மோட்டார் நிறுவனம், இந்திய சந்தைக்குள் சற்றே தாமதமாக நுழைந்திருந்தாலும் தற்போது அதிக அளவில் முதலீடு செய்து முன்னிலையில் உள்ளது. ஹைதராபாதின் ஸ்ரீ சிட்டி பகுதியில் உள்ள தனது புதிய தொழிற்சாலையில் ரூ.3000 கோடி ரூபாயை முதலீடு செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த தொழிற்சாலை 2015-16 க்குள் செயல்படத் துவங்கும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இசுசூ தனது முதல் இந்திய தயாரிப்பான பி.எஸ் 4 கம்பிளையன்ட் எம்.யு-7 எஸ்.யு.வி காரை வெளியிட்டுள்ளது. இதன் விலை ரூ.22.3 லட்சமாகும். (எக்ஸ்-ஷோரூம், சென்னை விலை) தொழிற்சார்ந்த வாகனங்கள் மற்றும் ஸ்போர்ட்ஸ் வாகனங்களையும் (எஸ்.யு.வி) தயாரிப்பதில் பிரபலமாக விளங்கும் இந்த நிறுவனம் இந்தியாவிலும் எஸ்.யு.வி தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது.

தற்போது இந்நிறுவனம் தனது வாகனங்களை சென்னை திருவள்ளுரில் உள்ள இந்துஸ்தான் மோட்டார் ஆலையில், உற்பத்தி ஒப்பந்த அடிப்படையில் எம்.யு-7 மற்றும் டி-மேக்ஸ் டிரக்குகளை அசம்பிள் செய்து வருகிறது. இந்த ஆலையில் ஒரு ஆண்டுக்கு 5,000 வாகனங்களை தயாரிக்க முடியும்.
ஸ்ரீ சிட்டியில் உள்ள தனது தொழிற்சாலை, துவக்கத்தில் 50,000 வாகனங்களை ஓராண்டில் தயாரிக்கும் எனவும், மூன்று ஆண்டுகளுக்குள், அதாவது 2015ஆம் ஆண்டில் இருந்து 2016 க்குள் இந்நிறுவனம் 1 லட்சம் வாகனங்களை தயாரிக்கும் வகையில் உற்பத்தி உயர்த்தப்படும் என்று இந்நிறுவனம் தெரிவித்தது.
இந்நிறுவனம் தனது புதிய தொழிற்சாலையில் 70 சதவிகிதம் அளவிற்கு உள்ளூர் வசதிகளை கொண்டே அமைக்கவும், சிறிது காலத்திற்குப் பின்னர் 100 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தது. இந்திய செயல்பாடுகளில் ஏற்றுமதி செய்வதும் முக்கிய திட்டங்களில் ஒன்றாக இருக்கும் என்றும் இந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
'இந்தியா ஐஸூசு நிறுவனத்தின் ஏற்றுமதி வனிகத்திற்கு மிகவும் ஏற்ற இடமாக இருக்கும். தெற்காசிய நாடுகள் மற்றும் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளில் வர்த்தகத்தை அதிகரிப்பதே எங்களின் குறிக்கோள்' என்று இந்தியாவின் இசுசூ மோட்டார் நிறுவனத்தில் மேலாண் இயக்குநராக உள்ள டக்காஷி கிக்குச்சி தெரிவித்தார்.
'தற்போது ஏற்றுமதியில் 60 சதவிகிதம் ஜப்பானில் இருந்து செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் எங்கள் உற்பத்தியை துவங்கியதும் எங்களின் நோக்கம் உள்நாட்டு சந்தையில் கவனம் செலுத்தவதாகவும் பின்னர் ஏற்றுமதியில் கவனம் செலுத்துவதாகவும் இருக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார்
தெற்குப் பகுதியில் எட்டு முகவர்களைக் கொண்டு செயல்பாட்டைத் துவங்கி, 2015-16-ம் ஆண்டுகளுக்குள் 60 முகவர்களாக அதிகரிக்க ஐஸூசு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications