டெல்லி: 17 மாதங்களாக ஊதியம் வழங்காத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தைக் கண்டு அதன் ஊழியர்கள் நாளை மறுநாள் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளனர்.
ஊதியம் வழங்கத் தவறிய கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் தலைவர் விஜயமல்லையா, பாராளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர்கள் என்று அறிவிக்க வேண்டும் என்றும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த கிங்ஃபிஷர் ஊழியர்கள், ஜனவரி 6 ந் தேதியிலிருந்து காலவரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கவுள்ளோம். இது தொடர்பாக நாங்கள் பல்வேறு அரசியல் கட்சிகளையும் தொடர்பு கொண்டோம்; ஆனால் அவர்களிடமிருந்து எங்களுக்கு திருப்திகரமான பதில் எதுவும் கிடைக்கவில்லை என்றனர்.
இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவு கோரியும் கிங்ஃபிஷர் ஊழியர்கள் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
வெளிநாட்டு பணியாளர்களுக்கு
அதே நேரத்தில் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் வெளிநாடுகளில் பணியமர்த்தப்பட்டிருக்கும் அதன் ஊழியர்களுக்கு, அந்நாடுகளில் நடைமுறையில் இருக்கும் கடுமையான சட்டதிட்டங்களின் காரணமாக, தவறாமல் ஊதியம் வழங்கி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை சுட்டிக்காட்டும் ஊழியர்கள், ஊதியம் வழங்காமல் இருப்பது பிடிவாரன்ட் இன்றி கைது செய்யப்படக்கூடிய குற்றமாக பாவிக்கப்பட வேண்டும்; அப்போது தான் வேறு யாரும் எங்களைப் போல் இத்தகைய துன்பத்தை அனுபவிக்க வேண்டியிருக்காது. என்று குமுறுகின்றனர்.
கடுமையான சட்ட திட்டங்கள்
தற்சமயம் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காமல் இருக்கும் நிர்வாகத்துக்கு எதிராக தெளிவான சட்டதிட்டங்கள் ஏதும் இல்லை என்கின்றனர் கிங்ஃபிஷர் ஊழியர்கள்.
7,200 கோடி ரூபாய் கடன்
ஊழியர்களுக்கு சரிவர ஊதியம் வழங்காமலிருப்பதோடு, 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து தன் சேவையை நிறுத்திக் கொண்ட, கிங்ஃபிஷர் விமான நிறுவனம், சுமார் 7,200 கோடி ரூபாய்க்கு மேலான வங்கிக் கடன்களையும் அடைக்கவில்லை. இதில் கணிசமான கடன்கள் பொதுத்துறை வங்கிகளிடமிருந்து பெறப்பட்டவையாகும்.
சேவை வரி நிலுவை
மேலும், இந்நிறுவனம் சேவை வரி கட்டணத்தை செலுத்தாததோடு, ஏர்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியாவிடம் சுமார் 390 கோடி ரூபாய் கடன்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் பணம்
உச்ச நீதிமன்றத்தை அணுகி, தகவலறியும் உரிமை சட்டத்தை உபயோகித்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண முயற்சிக்கும்படி ஆம் ஆத்மி கட்சியை நிர்ப்பந்தித்துள்ள கிங்ஃபிஷர் ஊழியர்கள் "பொதுமக்களுக்கு சொந்தமான பணத்தில் தான் இவர்கள் செழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே, அரும்பாடுபட்டு சம்பாதித்த பணம் தவறான வழியில் உபயோகிக்கப்படாமல் தடுக்க வேண்டியது பொதுமக்களின் கடமையாகும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications