மும்பை: இந்த ஆண்டு இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி இலக்கு ரூ.3,000 கோடி என்று மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் ஜவுளித் துறை மிகவும் அபரிமிதமான வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அதன் ஏற்றுமதி வளர்ச்சிக்கான அனைத்து வழிகளையும் அரசு முடுக்கி விட்டுக் கொண்டே இருக்கிறது என்று மத்திய ஜவுளித் துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் காங்வார் தெரிவித்தார்.
2வது இடத்தில் இந்தியா
ஜவுளி ஏற்றுமதியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. மேலும் கடந்த ஆண்டு நம் நாடு 4வது இடத்திலிருந்து 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரூ.3,000 கோடி இலக்கு
கடந்த ஆண்டு இந்தியா சுமார் ரூ.2,400 கோடிக்கு (40 பில்லியன் டாலர்கள்) ஜவுளிகளை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ஆண்டு அந்த இலக்கு ரூ.3,000 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்டை நாடுகளுடன்...
ஜவுளி வளர்ச்சிக்காக நம் பக்கத்து நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, தாய்லாந்து மற்றும் கம்போடியாவுடன் புதிய வர்த்தக இணைப்புகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி கணிசமாக உயரும் என எதிர்பார்கப்படுகிறது.
டெக்ஸ்டைல் பார்க்குகள்
நாடு முழுவதும் 25 முதல் 30 டெக்ஸ்டைல் பார்க்குகள் மற்றும் அவற்றின் சிறுசிறு கிளைகளும் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் புதிய தொழிற்நுட்ப வளர்ச்சி அதிகரித்து உற்பத்தியும் அதிக்கும்.
வேலை வாய்ப்புகள்
ஜவுளித் துறையில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி அதிகரிக்க திட்டமிடும் போது இத்துறையில் ஆட்கள் பலம் தேவைப்படும். இதனால் ஏராளமான வேலை வாய்ப்புக்களும் புதிதாக உருவாக்கித் தரப்படும். இதற்கான தொழிலாளர் கொள்கைகளில் சில மாற்றங்களை இந்த பட்ஜெட்டில் மத்திய அரசு கொண்டு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தேசிய பின்னலாடைக் கண்காட்சி
இந்திய ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் கூட்டமைப்பு (CMAI) நடத்தும் 3 நாட்கள் தேசிய பின்னலாடைக் கண்காட்சியை நேற்று துவக்கி வைத்த அமைச்சர் காங்வார் இந்த விவரங்களைத் தெரிவித்தார். இந்தக் கண்காட்சியில் ரூ.500 கோடி அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications