சான் பிரான்சிஸ்கோ: பிரபல ஹெட்போன் தயாரிப்பு நிறுவனமான பீட்ஸ் மியூசிக் அண்ட் பீட்ஸ் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளது. இதனை தொடர்ந்து ஆப்பிள் 200 பீட்ஸ் நிறுவன பணியாளர்களை வேலையிலிருந்து விரட்டவும் முடிவு செய்துள்ளது.
பீட்ஸ் நிறுவனத்தைத் தங்கள் குடும்பத்திற்குள் இணைத்துள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தன்னுடைய இணைய தளத்தில் தெரிவித்துள்ளது.
இசைக்கு முக்கியத்துவம்
நம் அனைவரின் இதயங்களிலும் இசைக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அந்த இசைக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு இந்த நிறுவனத்தை கைபற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் கூறியுள்ளது.
அடுத்தகட்ட இசைப் பயணம்
இசையின் பரிமாணத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல பீட்ஸ் நிறுவனத்துடன் ஒரு டீமாகப் பணியாற்றவுள்ளோம். அடுத்தது என்ன என்பதைக் கேட்குமளவு எங்களால் இனியும் காத்திருக்க முடியாது என்றும் தன் இணைய தளத்தில் ஆப்பிள் தெரிவித்துள்ளது.
200 பீட்ஸ் பணியாளர்களுக்கு கல்தா
பீட்ஸ் நிறுவனத்திற்குச் சென்ற ஆப்பிள் உயரதிகாரிகள், நிதி மற்றும் மனிதவளத் துறைகளைச் சேர்ந்த 200 பீட்ஸ் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்புவது குறித்து முடிவெடுத்தனர். ஆனாலும் க்ரியேட்டிவ் மற்றும் டெவலெப்மெண்ட் குழுக்களில் உள்ளவர்களை ஆப்பிள் நிறுவனம் தக்கவைத்துள்ளது.
பீட்ஸ் நிறுவனம்
இசை மேதைகள் ஜிம்மி லோவின் மற்றும் டாக்டர் ட்ரே ஆகியோரால் 2006ம் ஆண்டு தொடங்கப்பட்டது இந்த பீட்ஸ் நிறுவனம்.
பேட்டண்ட் வழக்கில் சிக்கிய பீட்ஸ்
சமீபத்தில், பீட்ஸ் ஹெட்போன்களில் நாய்ஸ்-கேன்சலிங் தொழில்நுட்பம் தொடர்பாக ஒரு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கைத் தொடுத்த போஸ் என்ற நிறுவனம், தன்னுடைய பேட்டண்ட்டுகளை பீட்ஸ் நிறுவனம் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறி பீட்ஸ் தயாரிப்புகளுக்குத் தடை விதிக்கவும், தங்களுக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் கோரியுள்ளது.


Click it and Unblock the Notifications