டெல்லி: மூத்த குடிமக்களுக்கு பயனளிக்கும் வகையில் மாதம் ரூ.500 முதல் ரூ.5000 வரை ஒய்வூதியம் பெறும் வகையிலான காப்பீட்டுத் திட்டத்தை நிதியமைச்சர் அருண் ஜெட்லி மீண்டும் தொடங்கி வைத்தார்.
60 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களுக்கு 15 ஆகஸ்ட 2014 முதல் 14 ஆகஸ்ட் 2015 வரையில் இந்த சீரமைக்கப்பட்ட திட்டம் கிடைக்கும். பின்வரும் நாட்களில் தொடர்ச்சியான வருமானத்தை உறுதிப்படுத்தி நிதி பாதுகாப்பை வழங்கும் திட்டமாக இருக்கும் என நிதி அமைச்சகத்தின் குறிப்பு தெரிவிக்கிறது.
எல்.ஐ.சி
இந்த திட்டத்தை ஆயுள் காப்பீட்டு நிறுவனம் நிர்வகிக்கும். (VPBY - வரிஷ்தா பென்சன் பீமா யோஜனா) என்ற இத்திட்டம் சமுதாயத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பிரிவுகளில் உள்ள மூத்த குடிமக்களுக்கு, ரூ.500 முதல் ரூ.5000 வரையில் ஓய்வூதியத்தை வழங்கி காப்பீடு அளிக்கும்' என்று திரு.ஜெட்லி குறிப்பிட்டார்.
முதலீடு
இத்திட்டத்திற்கான குறைந்த பட்ச முதலீடாக (வாங்கும் விலை) ரூ.66,665 ஆகவும், அதிகபட்சம் ரூ.6.66 இலட்சம் ஆகவும் இருக்கும். அடுத்த ஆண்டில் காப்பீடை வாங்குவதில் இருந்து ஓய்வூதியம் தொடங்கி விடும். காப்பீடு செய்யப்பட்டவர் மரணமடைய நேரிட்டால் ஒட்டு மொத்த முதலீட்டுத் தொகையும், அவராம் நியமனம் செய்யப்பட்டவருக்கு வழங்கப்படும்.
வரிஷ்தா பென்சன் பீமா யோஜனா
2003-04-ம் ஆண்டில் வரிஷ்தா பென்சன் பீமா யோஜனா திட்டத்தை முந்தைய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு தொடங்கிய போது, அதன் மூலம் 3.83 இலட்சம் மூத்த குடிமக்கள் பலனடைய வழி வகை செய்யப்பட்டிருந்தது. இத்திட்டத்தின் கீழ் ஆயுள் காப்பீட்டு நிறுவனம் 7,100 கோடி ரூபாயை வசூலித்திருந்தது. இப்போதைய திட்டத்தின் படி ஆயுள் காப்பீட்டு நிறுவனம் மேலும் அதிகமானவர்களுக்கு பலன் தரும் என்று நிதி அமைச்சர் நம்புகிறார்.
மூத்த குடிமக்கள்
மூத்த குடிமக்களின் நலம் மற்றும் நல்வாழ்வில் அரசு கொண்டுள்ள அக்கறையை இந்த முயற்சி பிரதிபலிப்பதாக உள்ளது. அதுவும் இந்தியர்களின் வாழ்நாள் அளவு அதிகரித்து வரும் இந்நேரத்தில், இது ஒரு தகுந்த முயற்சியாக இருக்கும் என்பதும் கவனிக்கத் தகுந்த அம்சமாகும்.
ரூ.10,000 கோடி மூலதனம்
இத்திட்டத்தின் சந்தா தொகையின் மூலம் சுமார் 10,000 கோடி ரூபாயை மூலதனமாக திரட்ட முடியும் மற்றும் இந்த நிதி நாட்டின் வளர்ச்சிக்காக சேகரிக்கப்படும் முக்கியமான வளமாகவும் இருக்கும்.
வட்டி விகிதம்
'வரிஷ்தா பென்சன் பீமா யோஜனாவில் வரவு செய்யப்படும் பணத்தின் மூலமாக, ஒட்டுமொத்த அளவில் ஆண்டுக்கு கிடைக்கும் 9.38 சதவீதம் வருமானமானது மாதாந்திர கணக்கு அடிப்படையில் அளிக்கப்படும்' என்று குறிப்பிட்டுள்ளர் திரு.அருண் ஜெட்லி.
நிலையான வட்டி விகிதம்
'நிலையில்லாத வட்டி விகிதங்கள் புழங்கி வரும் இந்த நாட்களில், மூத்த குடிமக்கள் தங்களுடைய எஞ்சிய நாட்களை கழிக்கும் வகையில் நிலையான வருமானத்தை இந்த திட்டம் அளிக்கும்' என்றும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications