டெல்லி: ஸ்பெக்ட்ரம் ஏலம் தொடங்கிய முதல் 9 நாட்களில் ரூ 1.01 கோடி வருவாயை மத்திய தொலைத் தொடர்புத் துறை ஈட்டியுள்ளது.
மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகம் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது. முதல் 9 நாட்களில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூ 1 லட்சம் கோடிக்கு மேல் ஏலத் தொகை குவிந்துள்ளது.
இந்த ஸ்பெக்ட்ரம் ஏலத்தின் முந்தைய கணிப்புகளில் மத்திய அரசு ரூ 82,000 கோடி வரை நிதி திரட்ட முடியும் எனக் கூறப்பட்டது. இந்த கணிப்பை மிஞ்சும் வகையில் ஏலத் தொகை குவிகிறது.
55 சுற்றுகள்
வெள்ளிக்கிழமை வரையிலான ஏல முடிவில், 55 சுற்றுகளின் மூலம் 87 சதவீத அலைக்கற்றைகளை தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள அலைகற்றைகளை சனிக்கிழமை நடக்க உள்ள 6 சுற்றுகளில் ஏலம் விட திட்டமிட்டுள்ளனர்.
போட்டி
இந்த ஏலத்தில் 900 MHz அலைகற்றைக்கு செல்போன் சேவை நிறுவனங்களுக்கிடையே அதிக போட்டி இருந்தது. இதனால் 900MHz பேண்ட் அலைகற்றையில் ஒரு 1MHz க்கு 3,980 கோடி ரூபாய் என்று அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலையை விட சுமார் 78.2 சதவீதம் கூடுதலாகக் கிடைத்துள்ளது.
உரிமத்தின் கால நீட்டிப்பு
தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அலைக் கற்றை உரிம காலத்தை 20 வருடங்களுக்கு அதிகமாக நீட்டிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களின் சேவையை நிலை நாட்டிக்கொள்ள ஏலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளன.
முக்கிய நிறுவனங்கள்
நாட்டின் முக்கிய நிறுவனங்களாக கருதப்படும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், பார்தி ஏர்டெல், ஐடியா மற்றும் வோடாபோன் ஆகிய நிறுவனங்களின் உரிமங்கள் காலாவதியாகும் நேரம் நெருங்கியுள்ளதால், இந்நிறுவனங்கள் மத்தியில் அதிகளவில் போட்டி நிலவுகிறது. 78.2 சதவீத விலை உயர்விற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
1.06 லட்சம் கோடி ரூபாய்!
மொத்த ஏல முடிவில் மத்திய அரசு சுமார் 1.06 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி திரட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications