டெல்லி: தென்னிந்தியாவின் முதன்மையான தொலைக்காட்சி நிறுவனமான சன் நெட்வொர்க் குழுமத்தின் 33 சேனல்கள் மீதான பாதுகாப்பு அனுமதியை அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. இதனால் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இக்குழுமம் தனது சேனல்களின் ஒளிபரப்பை நிறுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் இத்தகைய அறிவிப்பால் சன்டிவி நிறுவனத்தின் பங்குகள் சுமார் 25.56 சதவீதம் சரிந்துள்ளது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை
இந்நிறுவனத்தின் மீதான முடிவை நிதியமைச்சர் அருண் ஜேட்லி தலைமை வகிக்கும் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையிடம், உள்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
பாதுகாப்பு அனுமதியை மறுப்பதற்கான காரணங்களையும் உள்துறை அமைச்சகம், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது.
சன்டிவி பங்குகள்
இத்தகைய நிலையில் வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, சன் டிவி நிறுவன பங்குகள் 25 சதவீதம் சரிந்து 52 வார சரிவை பதிவு செய்துள்ளது.
மேலும் முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்நிறுவனத்தின் மீதான முதலீட்டைக் குறைத்து வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சகம்
இந்நிறுவனத்திற்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று முக்கிய வழக்குகளின் காரணமாகவே மத்திய உள்துறை அமைச்சகம் இந்நிறுவனத்தின் மீதான பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது.
உள்துறை அமைச்சகத்தின் இந்த அறிவிப்பை எதிர்த்து சன் நெட்வொர்க் குழுமம் நிதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளது.
முன்று முக்கிய வழக்குகள்
ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தம் தொடர்பாகச் சன் குழும தலைவர் கலாநிதி மாறன் மற்றும் அவரது தம்பி தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் நிதி மோசடிக்காகச் சன் டிவி நிறுவனத்திற்கு எதிராக அமலாக்கப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் டெலிபோன் இணைப்புகளை முறைகேடாகச் சன் டிவி பயன்படுத்தியது ஆகிய மூன்று வழக்குகள் இந்நிறுவனத்திற்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
40 ரேடியோ சேனல்கள்
அதேபோன்று 2015ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்தியாவில் செயல்படும் 40 ரேடியோ சேனல்களின் பாதுகாப்பு அனுமதியை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை
இத்துறையின் தலைவரான அருண் ஜேட்லி, சன் குழுமத்தின் மீதான அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய உள்துறை அமைச்சகத்தைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் இதுவரை உள்துறை அமைச்சகத்திடம் இருந்து எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை.


Click it and Unblock the Notifications