டெல்லி: உலகின் முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமாகத் திகழ்ந்த பிளாக்பெர்ரி நிறுவனம் தற்போது விற்பனையில் பின்தங்கிய உள்ளது.
இந்நிலையில் பிளாக்பெர்ரி நிறுவனத்தின் இந்திய கிளை தலைவராகக் கடந்த இரண்டு வருடமாகப் பணியாற்றிய சுனில் லால்வானி இந்நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

இதனிடையில் புதிய தலைவரை நியமிக்கும் வரை இந்நிறுவனத்தின் விற்பனை மற்றும் ஆசிய பசிபிக் பிரிவு தலைவரான மேத்யூ டான்கின் இந்திய பொறுப்புகளை ஏற்க உள்ளார்.
இதுகுறித்துப் பிளாக்பெர்ரி நிறுவனம் கூறுகையில், "சுனில் தனது பணியைப் பிளாக்பெர்ரி நிறுவனத்தை விட்டு வேறு நிறுவனத்தில் தொடர விரும்புகிறார். இவரது ராஜினாமவை நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. கடந்த இரண்டு வருடமாக இவரது பணி நிறுவன வளர்ச்சிக்கு பெரிதும் உதவியது." என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்துடன் போட்டிப்போட முடியாமல் இந்நிறுவனத்தின் விற்பனை சரிந்துள்ளது.
இந்நிறுவனத்தின் சமீபத்திய வெளியீட்டின் படி இனி பிளாக்பெர்ரி தயாரிப்புகள் அனைத்திலும் ஆண்டிராய்ட் மென்பொருளைப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications