டெல்லி: இந்தியாவிற்கான கடன் அளவை 50 சதவீதம் உயர்த்தி 12 பில்லியன் டாலர் வரை கடன் அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் தேகிஹிகோ நகோ தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் இந்தியாவில் முதலீடு செய்யவும், நிதியுதவி அளிக்கவும் பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகிறது. இப்பட்டியலில் தற்போது சர்வதேச நிதி நிறுவனங்களும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கடன் அளவு
ஆசிய வளர்ச்சி வங்கியின் தற்போதைய நிலைப்பாட்டின் படி, இந்தியாவிற்கு ஆசிய வங்கி 2015-2017ஆம் ஆண்டுக் காலத்தில் 7 - 9 பில்லியன் டாலர் வரை கடன் அளிப்பதாக அறிவித்திருந்தது.
ஆனால் தேகிஹிகோ அறிவிப்பின் படி இக்கடன் அளவை 12 பில்லியன் டாலர் வரை உயர்த்துவதாக ஆசிய வளர்ச்சி வங்கி முடிவு செய்துள்ளது.
சந்திப்பு
செவ்வாய்க்கிழமை காலை நிதியமைச்சர் அருண் ஜேட்லி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயடு அவர்களைத் தேகிஹிகோ சந்தித்த பின்பு இந்த அறிவிப்பை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
20 பில்லியன் டாலர்
மேலும் அவர், ஆசிய வளர்ச்சி வங்கியின் நிதிநிலையை ஆய்வு செய்த பிறகு கடன் அளவு 20 பில்லியன் டாலர் வரை உயர்த்தவும் தான் தயாராக உள்ளதாகத் தேகிஹிகோ குறிப்பிட்டார்.
சீனா - இந்தியா
இந்தியாவின் வளர்ச்சிக்குறித்துச் செய்தியாளர் ஒருவர் அவரிடம் கேட்டபோது, இந்தியாவில் புதிய வளர்ச்சி கணக்கை ஒப்பிடும் போது வளர்ச்சி மிகுந்த சீனா பின்தங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதுமட்டும் அல்லாமல் இந்திய சரியான பாதையில் செல்வதால் கூடிய விரைவில் பொருளாதார நாடுகள் பட்டியலில் சீனாவின் இடத்தை இந்தியா பிடித்துவிடும் என அவர் தெரிவித்தார்.
ஆசிய வளர்ச்சி வங்கி கணிப்புகள்
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆசிய வளர்ச்சி வங்கி செய்த ஆய்வில், 2015-16ஆம் ஆண்டில் இந்தியா 7.8 சதவீத வளர்ச்சியும், 2016-17ஆம் ஆண்டில் 8.2 சதவீத வளர்ச்சியை எட்டும் எனத் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications