மும்பை: மத்திய அரசின் 69,500 கோடி ரூபாய் நிதிதிரட்டும் திட்டத்தின் ஒரு பங்காக இந்தியாவின் முன்னணி கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளைத் திங்கள்கிழமை அரசு விற்றுள்ளது.
இதன் மூலம் மத்திய அரசு சுமார் 9,379 கோடி ரூபாய்த் திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தின் 10 சதவீத பங்குகள் தோராயமாக 24 கோடிக்கும் அதிகமான பங்குகள் விற்பனை செய்வதாக மத்திய அரசு அறிவிக்கும்போது முதலீட்டாளர்கள் இந்நிறுவன பங்குகளை வாங்க அதிக ஆர்வம் காட்டினர்.
வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் இந்தியன் ஆயில் பங்கு மதிப்பில் 2 சதவீத தள்ளுபடியுடன் ஒரு பங்கின் ஆரம்ப விலை ரூ. 387 என மத்திய அரசு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், திங்கள்கிழமை பங்கு வர்த்தகத்தில் இந்தியன் ஆயில் பங்கு விற்பனை மூலம் மத்திய அரசு ரூ. 9,379 கோடி வரை திரட்டியதாக மத்திய பங்கு விலக்கல் துறை செயலாளர் தெரிவித்தார்.
இந்த விற்பனையில் 90 சதவீத பங்குகளை மத்திய அரசின் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. விற்பனை செய்யப்பட்ட 10 சதவீத இந்தியன் ஆயில் பங்கின் விலையில் சில்லறை முதலீட்டாளர்களுக்கு 5 சதவீத சலுகை அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் மத்திய அரசு வைத்திருந்த 68.6 சதவீதப் பங்கில் 10 சதவீத அளவை விற்பனை செய்வதன் மூலம் சுமார் ரூ. 9,300 கோடி (1.4 பில்லியன் டாலர்) ஈட்டத் திட்டமிடப்பட்டிருந்தது. நடப்பு நிதி ஆண்டில் பங்கு விற்பனை மூலமாக மத்திய அரசு ரூ. 69,500 கோடி ரூபாய் வரை நிதிதிரட்ட திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications