நியூயார்க்: இந்திய பாதுகாப்புத்துறை மற்றும் இத்துறை சார்ந்த உற்பத்தியை மேம்படுத்தும் விதமாகப் பிரதமர் நரேந்திர மோடியின் அமெரிக்கப் பயணத்தில் அந்நாட்டுப் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு இந்தியாவில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி செய்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது.
இத்திட்டத்தில் முதல் படியாக இந்தியாவில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறை சார்ந்த உபகரணங்கள் மற்றும் வாகனங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை மோடி முக்கிய நிறுவன தலைவர்கள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து லாக்ஹூட் மார்டீன் நிறுவன தலைவரான மார்லீன் ஹீவ்சன் மற்றும் முக்கிய நிறுவன தலைவர்களை மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.
இச்சந்திப்பின் முடிவில் இந்தியாவில் விரைவில் உற்பத்தி துவங்கவும், புதிய வர்த்தகத்தைப் பெறவும் மார்லீன் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
ஏற்கனவே இந்நிறுவனம் இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் டாடா குழுமத்துடன் இணைந்து சி-130 ரக விமானங்களுக்கு வால் பகுதியை தயாரிக்கும் பணியில் ஈட்டுப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாக்ஹீட் மார்டீன் நிறுவனம் இந்தியாவில் தனது உற்பத்தி தளத்தையும், பொருட்களையும் விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதில் இந்நிறுவனத்தின் முதலீட்டு அளவு 49 சதவீதமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் AECOM நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனரான மைக் ப்ரூகி, நியூயார்க் மேயர் மற்றும் தொழிலதிபரான மைக்கில் ப்ளும்பெர்க் ஆகியோர் பிரதமர் மோடியைச் சந்தித்தனர்.


Click it and Unblock the Notifications