மும்பை: இந்தியாவில் அதிகளவில் விற்கப்படும் மேகி நூடுல்ஸ் மீதான தடை நீக்கப்பட்டு நெஸ்லே இந்தியா தனது தயாரிப்பை மீண்டும் துவங்கி அடுத்த 3 வாரங்களில் அனைத்துக் கடைகளுக்கும் கிடைக்கும் எனத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இந்திய மக்கள் கைகளில் விரைவில் சென்றடைய நெஸ்லே இந்தியா, ஆன்லைன் சில்லறை விற்பனை தளமான ஸ்னாப்டீல் உடன் இணைந்து 5 நிமிடத்தில் 60,000 பாக்கெட்டு மேகி நூடுல்ஸை விற்பனை செய்துள்ளது.
ஆன்லைன் விற்பனை
முதல் முறையாக நெஸ்லே இந்தியா ஸ்னாப்டீல் நிறுவனத்துடன் இணைந்து தனது ஆன்லைன் வர்த்தகத்தைப் பயன்படுத்தி 5 நிமிடங்களில் சுமார் 60,000 மேகி நூடுல்ஸ் பாக்கெட்டுகள் விற்றுத் தீர்த்தன.
ரசாயனம்
சுமார் 5 மாதங்களுக்குப் பிறகு காரீயம், மோனோசோடியம் குளூட்டமேட் ரசாயனங்களின் அளவுக்கதிகமான உட்கலப்பு விவகாரங்களைக் கடந்து, மேகி நூடுல்ஸ் மீண்டும் சந்தைக்கு வந்துள்ளது.
8 மாநிலங்களில் தடை
தடையிலிருந்து மீண்டு வந்துள்ள நெஸ்லே நிறுவனம் தனது பிரபல பிராண்டான மேகி நூடுல்ஸை சுமார் 300 விநியோகஸ்தர்கள் மூலம் 100 நகரங்களில் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது.
இன்னும் 8 மாநிலங்களில் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உயர் நீதிமன்ற
மும்பை உயர் நீதிமன்ற உத்தரவுகளின் படி மூன்று அரசு அங்கீகாரம் பெற்ற சோதனை மையங்களில் மேகி மீண்டும் பரிசோதனை செய்யப்பட்டு, ரசயான அளவுகள் சரியான அளவுகளில் இருப்பதாகச் சான்று அளிக்கப்பட்டது. இதன் பின் நீதிமன்ற அனுமதியுடன் நெஸ்லே இந்தியா தனது தயாரிப்பையும் விற்பனையும் துவங்கியுள்ளது.
மஹாராஷ்டிரா அரசு
இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மஹாராஷ்டிரா அரசு தீர்மானித்துள்ளது.
மீண்டும் தடை விதிக்க வேண்டும்..!
இதுகுறித்துக் கருத்து கூறிய மஹாராஷ்டிரா அரசு அதிகாரி ஒருவர் "மேகி நூடுல்ஸின் சில பாக்கெட்டுகள் மட்டுமே சோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், பிற பாக்கெட்டுகளில் உடல்நலத்துக்குக் கேடு விளைவிக்கும் பொருள்கள் இருக்கலாம். பொதுமக்களின் உடல் நலத்தைக் கவனத்தில் கொண்டு மேகி நூடுல்ஸ் மீதான தடையை நீட்டிக்கவே அரசு விரும்புகிறது" என்றார்
ரூ.450 கோடி இழப்பு
மேகி தடையால் நெஸ்லே நிறுவனம் சுமார் ரூ.450 கோடி இழப்பைச் சந்தித்தது. அதுமட்டும் அல்லாமல் இந்தியா முழுவதும் விநியோகத்தில் உள்ள 30,000 டன் நூடுல்ஸ்களையும் அழித்தது நெஸ்லே.
FSSAI அமைப்பு
மேகி நூடுல்ஸில் அதிகளவிலான நச்சுத்தன்மை உள்ள காரணத்தினால் இந்திய உணவு கட்டுப்பாட்டு வாரியம் (FSSAI) 5 மாதங்களுக்கு முன் இதன் தயாரிப்பு மற்றும் விற்னபனைக்கு இந்திய சந்தையில் முற்றிலும் தடை விதித்தது.
எப்டிஏ அமைப்பு
ஆனால் இத்தயாரிப்புக்கு அமெரிக்க உணவு கட்டுப்பாட்டு வாரியமான எப்டிஏ அமைப்பு நச்சுத் தன்மையற்றது என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications