மும்பை: உலக நாடுகளில் எங்கும் நிகழ்ந்த ஒரு முக்கிய நிகழ்வு மும்பை மண்ணில் தமிழர்கள் நடத்தியுள்ளனர். பொதுவாகச் சேம்பர் ஆஃப் காமர்ஸ் எனப்படும் தொழில் வர்த்தக அமைப்பு நாடுகள் மற்றும் மாநில அளவில் மட்டுமே இருக்கும்.
ஆனால் முதல் முறையாக ஒரு சமுகத்தினருக்கான சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பு மும்பையில் உதயமாகியுள்ளது.

மும்பை தமிழர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பை இன்று காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் முன்னிலையில், நேஷனல் எஜூகேசன் சொசைட்டி மற்றும் சரஸ்வதி வித்யாபவன் கல்விக் குழுமத்தின் நிறுவனர் தலைவர் ஆர்.வரதராஜன் முயற்சியின் பேரில் துவங்கப்பட்டுள்ளது.
மேலும் மும்பை தமிழர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அமைப்பிற்கு வரதராஜன் அவர்கள் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வமைப்பின் துவக்க விழாவில் ‘மும்பை தமிழர்கள் தொலைநோக்கு 2020' என்ற புத்தகத்தை இந்திய வர்த்தகசபை தலைவர் திலிப் பிராமல் வெளியிட்டார்.

இதில், முதன்மை விருந்தினர்களாக மாநில தொழில்துறை இணை மந்திரி பிரவின் பொடே பாட்டீல், மும்பை தூர்தர்சன் கேந்திரா துணை இயக்குநர் முகேஷ் சர்மா, இந்திய வர்த்தகச் சபை தலைவர் திலிப் பிரமல், மராட்டிய பின்னணி பாடகி அனுராதா பட்வல், ஆஸ்திரேலியா அரசு மண்டல இயக்குநர் பீட்டர் பால்ட்வின், மராட்டிய விளையாட்டு அசோசியேஷன் தலைவர் சாரங் ஜெக்தாப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மும்பை தமிழர்களின் தொழில் வர்த்தகசபை நிறுவனர் ஆர்.வரதராஜன் பேசுகையில், மும்பையில் 62 பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தொடங்கிச் சிறந்த கல்வி சேவை ஆற்றி வருகிறேன். மேலும் கல்வித்துறையில் மட்டுமில்லாமல் தொழில்துறையிலும் மும்பை தமிழர்கள் முன்னேற்றம் காண வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மும்பை தமிழர் சேம்பர் ஆஃப் காமர்ஸ் தொடங்கப்பட்டு உள்ளது.
மும்பையில் தாராவி, கோவண்டி, ஜெரிமெரி, மலாடு போன்ற இடங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமாகத் தமிழ் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சாதி, மதப் பேதமின்றி மும்பை தமிழர்களின் தொழில் வர்த்தகசபையில் உறுப்பினர்களாக இணைந்து தொழில்துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என வரதராஜன் பேசினார்.


Click it and Unblock the Notifications