டெல்லி: 2015ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இதேகாலக்கட்டத்தில் பொருளாதாரத்தில் அமெரிக்காவுடன் போட்டி போடும் சீனா இந்தியாவை விடவும் குறைவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் சர்வதேச சந்தைகள் மத்தியில் இந்திய சந்தையின் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
ஜிடிபி அறிக்கை
மத்திய புள்ளியியல் அலுவலகம் நேற்று வெளியிட்ட ஜிடிபி அறிக்கையில், இந்தியா செப்டம்பர் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 7.4 சதவீதம் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது. ஜூன் காலாண்டில் இதன் அளவு 7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனா
உலகில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருளாதார நாடாக விளங்கும் சீனா செப்டம்பர் காலாண்டில் 6.9 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது. இது கடந்த காலாண்டில் பதிவு செய்யப்பட்ட 8.4 சதவீத உயர்வை விடவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் அறிக்கை
மத்திய அரசின் பட்ஜெட் அறிக்கையில் 2015ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8-8.5 சதவீதமாக இருக்கும் என அறிவித்தது. நடைமுறையில் அதன் அளவுகளுக்கு மிகப்பெரிய வித்தியாசம் உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேநிலை மீண்டும் தொடர்ந்தால் மத்திய அரசு அறிவித்த இலக்கைக் கண்டிப்பாக எட்ட முடியாது.
அன்னிய முதலீடுகள்
செப்டம்பர் காலாண்டில் நாட்டின் வளர்ச்சி மற்றும் உற்பத்தி அளவுகள் தொடர்ந்து அதிகரித்ததுள்ளது. மேலும் இந்தியாவில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரித்ததற்கு முக்கியக் காரணம் மத்திய அரசு அறிவித்த தொடர் அன்னிய முதலீடுகளின் தளர்வுகள் தான்.
ஜூலை - செப்டம்பர் காலாண்டு
இக்காலகட்டத்தில் நாட்டில் எதிர்பார்க்காத வகையில் விவசாயப் பொருட்களின் உற்பத்தியில் அதிகரிப்பு, கட்டுமானத் துறையில் மேசமான வளர்ச்சியை இந்தியா சந்தித்துள்ளது. மேலும் 2015ஆம் ஆண்டின் 2வது காலாண்டில் நிதித்துறை மற்றும் உற்பத்தித்துறை புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
பெடரல் ரிசர்வ்
மேலும் இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் நடத்த உள்ள கூட்டத்தில் தனது வட்டி விகிதத்தை நிர்ணயம் செய்ய உள்ளது. இதனால் இந்திய பங்குச்சந்தையில் இருந்து மிகப்பெரிய முதலீடு குறையும் வாய்ப்புகள் உள்ளது. பெடரல் வங்கியின் முடிவுகள் இந்திய சந்தைக்குச் சாதகமாக அமைந்துவிட்டால் 2015ஆம் நிதியாண்டில் நாட்டின் நாட்டின் பொருளாதாரம் 7.6 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும்.


Click it and Unblock the Notifications