சென்னை: கடந்த சில வருடங்களாகச் சீன நாட்டின் வளர்ச்சி அளவுகள் குறைந்து வருவதைத் தொடர்ந்து, இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சி பாதையை நோக்கி பயணம் செய்கிறது.
இந்திய சந்தையில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் அதீத முதலீடுகளாலும், அதன் மூலம் உருவாகியுள்ள குறிப்பிடத்தக்க வேலைவாய்ப்புகளாலும் சர்வதேச சந்தையில் இந்தியா ஒரு தொழில்துறை நாடாக உருவெடுக்கத் துவங்கியுள்ளது.
இவ்வகையில் தினமும் வளர்ந்து வரும் தொழில்துறை நிறுவனங்களின் வெற்றியை நிலை நிறுத்துவதற்கும் மற்றும் அவற்றின் பிராண்ட் மதிப்பினை உயர்த்தவும் பொறுப்பாக இருப்பவர்கள் அந்நிறுவனங்களைத் தலைமை தாங்கி நடத்திச் செல்லும் தலைவர்கள் தான்.
இது போன்ற முக்கியமான பொறுப்பினை நிர்வகித்துச் செல்வதற்காக, இந்நிர்வாகிகள் பெரும் தொகையினை ஊதியமாகப் பெறுகிறார்கள். அந்த வகையில் இந்தியாவில் மிகவும் அதிகமாக ஊதியம் பெறும் முதல் 9 இயக்குநர்களைப் பற்றித் தான் பார்க்கப்போகிறோம்.
பவன் முன்ஜால்
இந்தியாவின் மிகவும் பிரபலமான நிறுவனவமாகவும் மற்றும் மிகவும் அதிகமான அளவு மோட்டார் சைக்கிள்களை விற்கும் நிறுவனங்களில் ஒன்றாகவும் இருக்கும் ஹீரோ மோட்டர் கார்ப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திரு.பவன் முன்ஜால் உள்ளார்.
இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற இவர் 1980-ம் ஆண்டு ஹீரோ குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தார். இன்று ஆண்டுக்கு சுமார் 44 கோடிகளை ஊதியமாகப் பெற்றுக் கொண்டு, ஹீரோ நிறுவனத்தை வழிநடத்திச் செல்லும் இவர் அதிகச் சம்பளம் வாங்கும் இந்திய நிறுவன தலைவர்கள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.
சுனில் காந்த் முன்ஜால்
இந்திய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டார் குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநராக இருக்கும் மற்றொரு முன்ஜால் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சுனில் காந்த் முன்ஜால்.
இவர் திரு.பவன் முன்ஜால் அவர்களை நெருங்கும் அளவில் ரூ.41.87 கோடிகளை ஆண்டு ஊதியமாகப் பெற்று இப்பட்டியலில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.
தேஷ் பந்து குப்தா
மருந்துகளை உற்பத்தி செய்யும் பன்னாட்டு நிறுவனமான லூபின் லிமிடெட் நிறுவனத்தைத் தொடங்கியவர் தேஷ் பந்து குப்தா ஆவார்.
1968-ல் இவரால் தொடங்கப்பட்ட லூபின் நிறுவனம், இன்றைய தேதியில் 1.83 பில்லியன் டாலர்கள் மதிப்பிற்கு உயர்ந்துள்ளது. ஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, உலகின் மிகவும் பணக்கார நபர்களில் திரு.குப்தா 254-வது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவருடைய தனிப்பட்ட சொத்துக்களாக 7.2 பில்லியன் டாலர்களும், ஆண்டுக்கு ரூ.37.58 கோடிகளை ஊதியமாகவும் கொண்டுள்ளார் திரு.குப்தா.
ஏ.எம். நாயக்
இந்தியாவின் புகழ் பெற்ற பொறியியல் கட்டுமான நிறுவனமாக அறியப்படும் லார்சன் அண்ட் டூப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருப்பவர் திரு.ஏ.எம். நாயக். 1965-ம் ஆண்டு இயந்திரவியல் பொறியியலில் பட்டம் பெற்ற பின்னர், இந்நிறுவனத்தில் இளம் பொறியாளராகச் சேர்ந்த திரு. நாயக் 1986-ம் ஆண்டுப் பொது மேலாளராகப் பதவி உயர்வு பெற்றார்.
அதைத் தொடர்ந்து, தலைமை செயல் அதிகாரியாகவும், நிர்வாக இயக்குநராகவும் இருந்து 2003-ம் ஆண்டு முதல் L & T நிறுவனத்தின் தலைவர் என்ற நிலைக்கு உயர்ந்துள்ளார். இவர் ரூ.27.32 கோடிகளை ஊதியமாகப் பெறுகிறார்.
சுனில் மிட்டல்
பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தைத் தொடங்கியவர், தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆகிய பெருமைக்கு உரியவர் திரு. சுனில் மிட்டல். இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகவும், 20 நாடுகளில் 275 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனமாகவும் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் தாய் நிறுவனம் இதுவே.
தன்னுடன் பிறந்த இருவருடன் 1976-ம் ஆண்டுத் திரு. மிட்டல் அவர்களால் தொடங்கப்பட்ட பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனம், 1995-ம் ஆண்டுத் தொலைத்தொடர்பு துறையில் கால் பதித்தது. இன்றளவில் இத்துறையில் முன்னோடி நிறுவனமாக ஏர்டெல் கோலோய்ச்சிக் கொண்டுள்ளது. இந்நிறுவனத்தின் தலைவரான திரு. மிட்டல் ரூ.27.18 கோடிகளை ஊதியமாகப் பெறுகிறார்.
வினிதா குப்தா
லூபின் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக அறியப்படும் வினிதா குப்தா, ரூ.24.86 கோடிகளை ஆண்டு ஊதியமாகப் பெற்று இந்தப் பட்டியலில் 6-வது இடத்தைப் பெறுகிறார். தன்னுடைய தந்தை தேஷ் பந்து குப்தாவின் பாதையைப் பின்பற்றி வந்த அவர், தன்னை ஒரு வெற்றிகரமான தொழில் முனைவராக வெளிப்படுத்தி உள்ளார்.
டி பட்டாச்சார்யா
ஆதித்யா பிர்லா குழுமத்தின் துணை நிறுவனமான ஹிண்டால்கோ இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக இருக்கிறார் திரு.டி. பட்டாச்சார்யா. இவருடைய தலைமையில் 40 சதவீதம் வளர்ச்சியை எட்டிப் பிடித்ததன் காரணமாக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவருடைய ஆண்டு ஊதியம் ரூ.21.59 கோடிகளாகும்.
நடராஜன் சந்திரசேகரன்
டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் தற்போதைய நிர்வாக இயக்குநராகவும் மற்றும் முந்நாளைய தலைமை செயல் அதிகாரியாகவும் இருந்தவர் நடராஜன் சந்திரசேகரன் ஆவார். திருச்சியில் பொறியியல் படிப்பை முடித்த அவர், 1987-ம் ஆண்டு டி.சி.எஸ் நிறுவனத்தின் சேர்ந்தார்.
அன்று முதல் இன்று வரை அவருடைய பணியில் எந்தவித சறுக்கல்களும் ஏற்பட்டதில்லை எனலாம். 2015-ம் ஆண்டில், அவருடைய ஆண்டு வருமானம் ரூ.21.28 கோடிகளாகும்.
குமார் மங்கலம் பிர்லா
ஆதித்யா பிர்லா குழுமத்தின் நான்காவது தலைமுறை வாரிசாக இருக்கும் குமார் மங்கலம் பிர்லா அந்நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 28 வயதிலேயே நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட அவர், பல்வேறு துறைகளிலும் தன்னுடைய நிறுவனத்தை எதிர்பார்த்ததற்கும் மேலான வளர்ச்சியை நோக்கி வழிநடத்திச் சென்று வருகிறார்.
ஆண்டுக்கு ரூ.19.04 கோடிகளை ஊதியமாகப் பெற்று, இந்தப் பட்டியலில் 9வது இடத்தைப் பெறுபவரும் இவரே!


Click it and Unblock the Notifications