டெல்லி: 2016ஆம் ஆண்டில் இந்தியா மிகப்பெரிய பொருளாதார நாடாக உருவெடுக்கும், அதுமட்டும் அல்லாமல் வேகமாக வளரும் நாடுகள் பட்டியலில் முதன்மையான இடத்தைப் பெறும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கியின் 2016ஆம் ஆண்டுக்கான குளோபல் எக்னாமிக் பிராஸ்பெக்டஸ் என்னும் தலைப்பில் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்து முக்கிய ஆய்வுகள் செய்யப்பட்டது.
இதில் 2016ஆம் ஆண்டில் உலகின் 2வது பொருளாதார நாடாக விளங்கும் சீனாவை விடவும் சிறப்பான வளர்ச்சியை இந்தியா அடையும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
2016இல் இந்தியா
2016ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த பொருளாதார வளர்ச்சியின் அளவு 7.8 சதவீதமாக இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இதே காலக்கட்டத்தில் சர்வதேச பொருளாதாரம் 2.9 சதவீதம் வரை உயரும் எனவும் உலக வங்கி தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.
2015ஆம் ஆண்டில் சர்வதேச பொருளாதார வளர்ச்சி 2.4 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. நடப்பு நிதியாண்டில் கணிப்புகளின் அளவு உயர்ந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
சீனா
2016ஆம் ஆண்டில் சீனாவின் மந்த பொருளாதாரச் சூழ்நிலைகளில் இந்தியாவை விடவும் குறைவாக அதாவது 6.7 சதவீதம் வரை மட்டுமே உயரும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
பிற நாடுகள்
இந்நிலையில் வங்காளதேசம் 6.7 சதவீதமாகவும், பாகிஸ்தான் 5.5 சதவீதமாகவும் இருக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
அதுமட்டும் அல்லாமல் 2016ஆம் ஆண்டில் தென் ஆசிய நாடுகள் தான் அதிகளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்யும் எனத் தெரிவித்துள்ளது உலக வங்கி.
பிரிக்ஸ் நாடுகளின் கதி
இதே காலக்கட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளின் வளர்ச்சியைப் பார்க்கும்போது, சர்வதேச கமாடிட்டி விலை நிலைகளின் மூலம் ரஷ்யாவின் வளர்ச்சி 0.7% குறையும் எனவும், பிரேசிஸ் 2.5 சதவீதம் வரையிலான வளர்ச்சி குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் தென் ஆப்பிரிக்காவின் வளர்ச்சி மட்டும் 1.4 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளரும் சந்தைகள்
கணிப்புகளையும் தாண்டி அதிகளவில் வீழ்ச்சி அடையும் சீன சந்தையால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கான வாய்ப்புகள் அதிகளவில் குறையும் என எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கி தெரிவித்துள்ளது.
சிஎஸ்ஆர்
குளோபல் எக்னாமிக் பிராஸ்பெக்டஸ் ஆய்வறிக்கையில், உலக நாடுகளில் இந்தியாவில் மட்டும் தான் சிஎஸ்ஆர் எனப்படும் கார்பரேட் சோசியல் ரெஸ்பான்சிபிலிட்டி சேவையில் செலவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் 500 கோடி ரூபாய் மதிப்புடைய அல்லது 1000 கோடி ரூபாய் விற்றுமுதல் கொண்ட நிறுவனங்கள் அல்லது 5 கோடி ரூபாய் லாபம் பெறும் நிறுவனங்கள் கட்டாயமாக 2 சதவீத பணத்தைச் சிஎஸ்ஆர் பணியில் செலவு செய்ய வேண்டும்.


Click it and Unblock the Notifications