டெல்லி: உற்பத்தி துறையை மேம்படுத்த தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடலோரப் பொருளாதார மண்டலங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் 7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமான கடற்கரை பகுதிகள் உள்ளன. எனவே, கடலோர பொருளாதார மண்டலம் அமைப்பதன் மூலம் உற்பத்தி துறையை மேம்படுத்தி, ஏற்றுமதியையும் அதிகரிக்க அரசு திட்டமிட்டுள்ளது.

சீனா தனது கடற்கரை நகரங்களில் இது போன்ற மண்டலங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. இந்த நகரங்கள் அரசின் சிறப்பு கொள்கைகளை பயன்படுத்தி வருகின்றன. இந்தியாவில் பல துறைமுகங்கள் உள்ளன. ஆனால் இந்த துறைமுகங்கள் பொருளாதார ஒருங்கிணைப்பு மையங்களாக இல்லை. இந்த துறைமுகங்கள் இதன் பலன்களை பயன்படுத்திக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
சிறப்பு பொருளாதார மண்டலங்களில் முதலீட்டாளர்கள் உற்பத்தி சார்ந்த தொழிலை தொடங்கினால் வரிவிலக்கு, ஒழுங்குமுறை ஆணையங்களில் விரைவான அனுமதிகள், தடையற்ற மின்சாரம் மற்றும் பாதுகாப்பு போன்ற பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
சிறப்பு பொருளாதார மண்டலங்களைவிட கடலோர பொருளாதார மண்டலங்கள் வேறுபாடானவை. நாடு முழுவதும் உள்ள பல்வேறு கடற்கரை நகரங்கள், மாநில வித்தியாசங்கள் இல்லாமல் ஒரே மாதிரியான சலுகைகள் கொடுக்க வேண்டும். உதாரணமாக சீனாவில் இந்த மண்டலங்களில் பல சலுகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலங்களில் உள்நாட்டு தேவைகளுக்கான உற்பத்தி மட்டுமல்லாமல், ஏற்றுமதிக்கான உற்பத்திக்கும் பல சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களில் இந்த கடலோர பொருளாதார மண்டலங்கள் அமைக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.


Click it and Unblock the Notifications