சென்னை: இணையதளம் வழியான டிவி சேவை நிறுவனமான யப் டிவி, சன் டிவி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் மூலம் சன் டிவி, கேடிவியின் நிகழ்ச்சிகளை தனது இணையதள நேயர்களுக்கு யப் டிவி ஒளிபரப்பும்.
அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு செயல்படும் யப் டிவி நிறுவனம், இணையம் வழியாக இந்திய தொலைக்காட்சி சானல்களை வழங்கி வருகிறது. இந்தி, கன்னடம், மராத்தி, குஜராத்தி, தெலுங்கு, பஞ்சாபி, பெங்காலி, தமிழ், மலையாளம், ஒடியா மற்றும் ஆங்கில தொலைக்காட்சி சானல்களை வழங்கி வரும் இந்நிறுவனம் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பாகிஸ்தான், இலங்கை, ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிறது.

யப் டிவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் 10 சானல்களைத் புதிதாக தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இவை மத்திய கிழக்கு மற்றும், வடக்கு ஆப்பிரிக்காவில் தொடங்கப்படும்.
மேலும் இந்த சானல்கள் மூலமாக சன் குழுமத்தின் சன், கே டிவி, சன் மியூசிக், ஆதித்யா ஆகிய தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும். அதேபோல சூர்யா, கிரண் ஆகிய மலையாள சேனல்கள், ஜெமினி டிவி, ஜெமினி மூவிஸ், ஜெமினி காமெடி ஆகிய தெலுங்கு சேனல்களும், கன்னடத்து உதயா டிவி சானலும் ஒளிபரப்பாகும்.
இதுகுறித்து யப் டிவியின் நிறுவனரும், தலைமை செயலதிகாரியுமான உதய் ரெட்டி கூறுகையில், தெற்கு ஆசியாவைச் சேர்ந்த மக்களுக்குஇது பெரும் மகிழ்ச்சியான செய்தியாகும். எங்களது நிகழ்ச்சி தவிர பிரபலமான சன் குழுமச் சானல்களையும் இனி எங்களுடைய நேயர்கள் பார்த்து மகிழ முடியும் என்றும் கூறினார்.
தென் இந்தியாவில் அதிக அளவிலான சானல்களை வைத்துள்ள நிறுவனம் சன் குழுமம். இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனங்களில் இதுவும் ஒன்று. எனவே இது மிகப் பெரிய வெற்றி பெறும் என்று சன் குழுமத்தின் தலைவர் மகேஷ் குமார் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications