டெல்லி: மத்திய அரசின் பிஎப் கணக்கு மீது விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் மற்றும் குறைவான வட்டி விகிதம் ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் ஊழியர்கள் தரப்பில் கடுமையான எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை தொழிலாளர் துறை அமைச்சர் தத்தாத்ரேயா, பிஎப் கணக்கு மீதான வட்டி விகிதத்தை 8.80 சதவீதமாக உயர்த்த வேண்டும் என நிதியமைச்சர் அருண் ஜேட்லியிடம் வலியுறுத்தினார்.

இதன் அடிப்படையில் மத்திய அரசு இன்று 2015-16ஆம் நிதியாண்டுக்கான பிஎப் கணக்கின் வட்டி விகிதத்தைத் தனது முந்தைய அறிவிப்பான 8.70 சதவீதத்தில் இருந்து 8.80 சதவீதமாக உயர்த்தி அறிவித்துள்ளது.
2014-15ஆம் நிதியாண்டில் இதன் அளவு 8.75 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் மத்திய அரசு பிஎப் கணக்கு மீதான புதிய கட்டுப்பாடுகளை முழுமையாகத் திரும்பப்பெற்றுக்கொள்வதாக அறிவிக்கவில்லை, இதனால் ஊழியர்கள் மத்தியில் புதிய கட்டுப்பாடுகளின் அமலாக்கத்திற்குக் கடுமையான எதிர்ப்புகள் நிலவி வருகிறது.
பிஎப் கணக்கு மீது விதிக்கப்பட்ட புதிய கட்டுப்பாடுகள் மே 1ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யத் திட்டமிட்ட மத்திய அரசு பெங்களூரு மற்றும் இந்தியாவின் முக்கியப் பகுதிகளில் வெடித்த போராட்டங்கள் மற்றும் வன்முறையின் காரணமாக ஆகஸ்ட் 1 வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications