மும்பை: இந்திய டெலிகாம் சந்தையைப் புரட்டிப்போட காத்திருக்கும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ தனது சேவையை ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாக வணிகச் சந்தைக்கு அறிமுகம் செய்ய முடிவு உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோவின் 4ஜி சேவை அறிமுக நாளில் FREEDOM என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதில் இலவசம் அழைப்புகள், இலவச டேட்டா எனப் பல்வேறு விதமான சேவைகளை அளிக்க உள்ளது.
மேலும் சந்தையில் உள்ள பிற நிறுவனங்களுக்கு ஒப்பிடுகையில் இந்நிறுவனத்தின் சேவை கட்டணம் 25 சதவீதம் குறைவாக இருக்கும் என ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதுவே இந்நிறுவனத்தின் சேவை அறிமுகத்தின் எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் துண்டியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தில் புதிதாகத் துவங்கப்பட்ட டெலிகாம் சேவை பிரிவு தான் இந்த ரிலையன்ஸ் ஜியோ.
இந்தியாவில் 500 ரூபாய்க்கு மொபைல் போன் அறிமுகப்படுத்தி இந்திய மக்கள் தொகையில் 30 சதவீதம் பேருக்கு மொபைல் போன் பயன்பாட்டை அறிமுகம் செய்ததும் இந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தான். 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் டெலிகாம் சேவை துறையில் புரட்சி செய்ய வந்துள்ளது முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ.
இந்திய டெலிகாம் சந்தை
அதிக மொபைல் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் நாடுகளில் டாப் 5 இடத்தில் இருக்கும் இந்தியாவில் ஏர்டெல், ஏர்செல், வோடாபோன், ஐடியா, பிஎஸ்என்எல் எனப் பல நிறுவனங்கள் போட்டி போட்டு அதிகக் கட்டணம் மூலம் ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடியில் லாபத்தைச் சம்பாதிக்கிறது.
இத்தகைய போட்டி மிகுந்த சந்தையில் குறைவான கட்டணத்தில் யார் சேவை அளித்தாலும் மக்கள் அவர்கள் பக்கம். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவே ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது.
25 சதவீத குறைவான கட்டணம்
ரிலையன்ஸ் ஜியோவின் அறிமுகத்தின் மூலம் இந்திய சந்தையில் டெலிகாம் சேவைகளின் கட்டணம் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் டெலிகாம் நிறுவனங்களின் லாபம் அதிகளவில் குறையும் என்பது உறுதி.
ஆகஸ்ட் மாதம்
கடந்த 6 மாத காலமாகப் பல்வேறு பகுதிகளாகத் தனது டெலிகாம் சேவையை அறிமுகம் செய்த ரிலையன்ஸ் ஜியோ, ஆகஸ்ட் மாதத்தில் முழுமையான வணிகச் சந்தைக்குத் தனது சேவையை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.
முன்கூட்டி அறிமுகம்
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிமுகம் செய்யத் திட்டமிட்ட ரிலையன்ஸ் ஜியோ ஸ்பெக்டரம் ஏலத்திற்கு முன்கூடியே அதாவது ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ய உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகம் குறித்து இந்நிறுவனத்தின் பெயர் வெளியிட விரும்பாத 3 உயர் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
பிரீடம்
ஆகஸ்ட் மாதத்தில் நாடு முழுவதும் கொண்டாப்படும் சுதந்திர தினத்தில் ஜியோ சேவைகள் அறிமுகம் செய்யப்படலாம். காரணம் இந்நிறுவனத்தின் அறிமுகத் திட்டத்தின் பெயர் பிரீடம்.
கட்டணம்
அறிமுகம் குறித்த உறுதியான செய்தி அளித்த ஜியோ உயர் அதிகாரிகள், டெலிகாம் நிறுவனங்களுக்குக் கடுமையான போட்டி அளிக்கும் வகையிலும், சேவையின் துவக்கத்திலேயே அதிகளவிலான வாடிக்கையாளர்களைப் பெறவும் ஜியோ தனது சேவைக் கட்டணத்தைப் பிற நிறுவனங்களை ஒப்பிடுகையில் 25 சதவீதம் குறைவான கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது அவர்கள் கூறினர்.
ஸ்டார்ட்-அப்
உலகிலேயே 1,50,000 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்கப்பட்ட மிகப்பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ. 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் 4ஜி அலைக்கற்றைக் கைப்பற்றிய ரிலையன்ஸ் 6 ஆண்டுகளுக்குப் பின் தற்போது மக்களுக்கான முழுமையான சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications