மும்பை: நாட்டின் மிகப்பெரிய பலதுறை நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், 2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் 18 சதவீதம் லாப உயர்வைப் பெற்றுள்ளது.
ஜாம்நகரில் இக்குழுமத்திற்குச் சொந்தமாக இருக்கும் இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலையில், இக்காலாண்டில் அதிகளவிலான எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்பட்டதே இந்த லாப வளர்ச்சி முக்கியக் காரணமாக அமைந்துள்ளது என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தெரிவித்துள்ளது.
லாபம்
ஏப்ரல்-ஜூன் மாத காலாண்டில் இக்குழுமத்தின் லாப அளவு 18 சதவீதம் உயர்ந்து 7,113 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ
இந்நிலையில் ஆகஸ்ட் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அதிகவேக 4ஜி டெலிகாம் சேவைகள் வணிகச் சந்தைக்கு அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளதால், அடுத்தக்காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் மற்றும் வருவாய் அளவுகள் அதிகளவில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எண்ணெய் சுத்திகரிப்பு
இந்திய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சுத்திகரிப்பு தொழிற்சாலையின் லாபம் 8 வருட உச்சத்தை அடைந்துள்ளது. குறிப்பாகக் கடந்த வருடம் ஒரு பேரல் சுத்திகரிப்பு லாபம் 10.40 டாலரில் இருந்த தற்போது 11.50 டாலராக உயர்ந்துள்ளது.
வருவாய் சரிவு
இப்பிரிவின் லாப அளவுகள் உயர்ந்தாலும், வருவாய் அளவுகள் 13.4 சதவீதம் சரிந்து 71,451 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் ரீடெயில்
மேலும் ரிலையன்ஸ் ரீடெயில் பிரிவின் வருவாய் இக்காலாண்டில் 45.6 சதவீதம் உயர்ந்து 6,666 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications