மும்பை: நாட்டின் 3வது மிகப்பெரிய தனியார் வங்கியாக உயர்ந்துள்ள ஆக்சிஸ் வங்கி, தனது வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் கடனுக்கான அடிப்படை வட்டி விகிதத்தில் 0.10 சதவீதத்தைக் குறைந்து 9.35 சதவீதமாக அறிவித்துள்ளது.
இப்புதிய வட்டி விகிதம் வருகிற ஜூலை 27ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை கூட்டம் முடிந்து பல வாரங்கள் ஆன நிலையில் சந்தையில் வாடிக்கையாளர்களைக் கவரும் ஒரே நோக்கில் திடீரென வட்டி குறைப்பில் இறங்கியுள்ளது ஆக்சிஸ். இந்த வட்டிக்குறைப்பு வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பல்வேறு நிதிதிட்டங்களுக்கும் பொருந்தும் எனவும் ஆக்சிஸ் வங்கியின் செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இதனால் நாட்டின் பிற வங்கிகளும் தனது வட்டி விகிதத்தைக் குறைக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளதாகச் சந்தை வல்லுனர்கள் கூறியுள்ளனர்.

மேலும் அடுத்த வரும் காலாண்டுகளில் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் பயணிகளை அதிகம் கவர ஆக்சிஸ் திட்டமிட்டுள்ளது. இதற்காக "Happy Holidays" என்ற திட்டத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
இத்திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் ஆக்சிஸ் வங்கியின் மொபைல் செயலி பயன்படுத்தி நாணய பரிமாற்றம், இன்சூரன்ஸ் மற்றும் சிம் கார்டு போன்றவற்றை அளிக்க உள்ளது என ஆக்சிஸ் வங்கியின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் ஆனந்த் கூறினார்.
இன்றைய பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஆக்சிஸ் வங்கியின் பங்குகள் 1.80 சதவீதம் சரிந்து 548.20 ரூபாய் என்ற விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் இந்நிறுவனத்தின் பங்கு விலை 465.85 ரூபாயில் இருந்து 548.20 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இக்காலகட்டத்தில் இதன் அதிகப்படியான விலை மதிப்பு 569.95 ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications