நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஜூன் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் 31.7 சதவீத லாப சரிவை அடைந்துள்ளது.
2016ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் எஸ்பிஐ வங்கியின் லாப அளவுகள் 2,475 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சந்தைக் கணிப்புகளை உடைத்தெறிந்து 2,520 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்று முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது.

கடந்த ஆண்டை ஒப்பிடும் போது இதன் லாப அளவுகள் சுமார் 31.7 சதவீதம் குறைவாகும். அதாவது கடந்த நிதியாண்டின் இதேகாலக்கட்டத்தில் எஸ்பிஐ வங்கியின் லாப அளவு 3,692.43 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் நாட்டின் பிற பொதுத்துறை வங்கிகளை ஒப்பிடும் போது எஸ்பிஐ வங்கியின் செயற்படா சொத்துக்களின் வளர்ச்சியின் வேகம் மிகவும் குறைவாகவே உள்ளதும் இக்காலாண்டு முடிவில் தெரிய வந்துள்ளது.
கடந்த காலாண்டில் 6.5 சதவீதமாக இருந்த செயற்படா சொத்துக்களின் அளவு தற்போது 6.94 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இத்தகையைச் சாதகமான சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தையில் எஸ்பிஐ வங்கியின் பங்குகள் இன்று ஒரே நாளில் 8 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications