கடைசியில் இப்படியா ஆகனும்..!
இந்தியாவில் புதிய மாதிரியான வர்த்தகத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பது எவ்வளவு கடினம் என்பதை விவரிக்கத் தேவையில்லை. ஆனால் இதில் ஈகார்மஸ் துறை முற்றிலும் விதிவிலக்குப் பெற்றது.
இந்திய மக்களுக்குச் சற்றும் அறிமுகமில்லாத ஈகாமர்ஸ், மிகவும் குறைந்த காலகட்டத்திற்குள் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்துள்ளதை நாம் மறுக்க முடியாது. ஆனால் இத்துறை நிறுவனங்கள் மத்தியில் நிலவும் போட்டி ஒரு நிறுவனத்தையே மூழ்கடிக்கும் வகையில் தற்போது நிலைமை மாறியுள்ளது தான் வருத்தமான செய்தி.
ஆம், அமெரிக்க ஈகாமர்ஸ் நிறுவனமான அமேசான் இந்தியாவிற்குள் நுழைந்த நாள் முதல் இச்சந்தையில் முன்னணியாக இருக்கும் பிளிப்கார்ட் தொடர் வர்த்தகச் சரிவை சந்தித்து வந்தது. இதனால் இரு நிறுவனங்களுக்கு மத்தியிலான போட்டி விஸ்வரூபம் எடுத்த நிலையில் தற்போது பிளிப்கார்ட் நிறுவனம் வரலாறு காணாத நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
பிளிப்கார்ட்
ரிடைல் வர்த்தகர்களுக்கும், வாடிக்கையாளர்களும் இணையதளம் மூலம் இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்ய உதவும் ஒரு தளம் தான் ஈகாமர்ஸ். ஈபே, அமேசான் போன்ற நிறுவனங்கள் உலகளாவிய வர்த்தகத்திற்கு இடம் அளிக்கிறது.
இத்துறையில் இந்தியாவில் சிறந்து விளங்கும் ஒரு நிறுவனம் பிளிப்கார்ட் இண்டர்நெட் பிரைவேட் லிமிடெட். இது அதிகாரப்பூர்வமாகச் சிங்கப்பூரை தலைமையாகக் கொண்டு செயல்பட்டாலும், இந்தியாவில் வர்த்தகத்திற்காகப் பதிவு செய்ப்பட்டுள்ளது.
நஷ்டம்
இந்திய சந்தையை மட்டும் முக்கியமாகக் கொண்டு வர்த்தகம் செய்து வரும் பிளிப்கார்ட், அமேசான் உடன் போட்டி போடும் வகையில் பல திட்டங்களை அறிவித்துத் தோற்றுப்போனது.
இதனால் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிந்த வருடத்தில் பிளிப்கார்ட் நிறுவனம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 2,306 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
இது கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் 110 சதவீதம் அதிகமானது.
அறிமுகமும், வரவேற்பும்..
அமெரிக்காவில் அலிபாபா நிறுவனத்துடன் போட்டி போட்டுத் தனது வர்த்தகச் சந்தையைப் போராடி நிலைநிறுத்திய அமேசான் நிறுவனம் புதிய வர்த்தகச் சந்தைக்காக ஆய்வு செய்த நிலையில் ஈகாமர்ஸ் வர்த்தகத்திற்கு அதிகளவில் ஆதரவு அளிக்கும் இந்தியாவைத் தேர்ந்தெடுத்தது.
அமேசான் நிறுவனத்தின் அறிமுகம் இந்தியாவில் சிறப்பாக இல்லை என்றாலும் இதன் சேவை மக்கள் மத்தியில் அதிகளவிலான வரவேற்பைப் பெற்றது.
5 பில்லியன் டாலர் முதலீடு
இந்தியாவில் அறிமுகம் செய்த சில மாதங்களில் வாடிக்கையாளர் மத்தியில் நன்மதிப்பைப் பெற்ற அமேசான், வாய்ப்பைச் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் வர்த்தக வளர்ச்சிக்காக 5 பில்லியன் டாலர் முதலீடு செய்தது.
போட்டியின் துவக்கம்
அமேசான் நிறுவனத்தின் 5 பில்லியன் டாலர் முதலீடும் அதன் வளர்ச்சியைச் சமாளிக்கும் வகையில் பிளிப்கார்ட் பல முக்கியத் திட்டங்கள், சலுகைகள் அறிவித்தது.
விற்பனை
பிளிப்கார்ட் நிறுவனத்தின் அதிரடி சலுகைகள், திட்டங்கள் மூலம் இதன் விற்பனை 153 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் நட்டத்தின் அளவும் அதிகரித்துள்ளது.
2014 மற்றும் 2015ஆம் நிதியாண்டு காலத்தில் பிளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் 4 மடங்கும், நஷ்டத்தின் அளவு 3 மடங்கும் அதிகரித்துள்ளது.
பிளிப்கார்ட் இண்டர்நெட்
பிளிப்கார்ட் இண்டர்நெட் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் பிளிப்கார்ட்.காம் இணையதளத்தின் வர்த்தகம், இதன் மூலம் கிடைக்கும் விற்பனையாளர் கமிஷன் மற்றும் பிற சேவைகளான விளம்பரம் ஆகியவை இந்நிறுவனத்தைச் சாறும்.
வர்த்தகமும்.. சேவையும்..
இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் வர்த்தகத்திற்காகப் பதிவு செய்யப்பட்டு, ஈகாமர்ஸ், லாஜிஸ்டிக்ஸ், மொத்த விற்பனை மற்றும் பேமெண்டு சேவைகளை வழங்குகிறது.
இவ்விருநிறுவனமும் பன்னாட்டு நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டைப் பெறுகிறது.
பிளிப்கார்ட்
இந்நிறுவனத்தின் வர்த்தகம் இந்தியாவில் இரு நிறுவனங்களின் பெயரில் நடத்தப்படுகிறது. முதலாவது பிளிப்கார்ட் இண்டர்நெட், இரண்டாவது சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட பிளிப்கார்ட் மார்கெட்பிளேஸ் நிறுவனம்.
இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமான பிளிப்கார்ட் லிமிடெட் நிறுவனத்தில் பிளிப்கார்ட் இண்டர்நெட் 99.74 சதவீத பங்குகளை வைத்துள்ளது.


Click it and Unblock the Notifications