சரக்குப் போக்குவரத்திற்குப் பிரத்தியேக விமான நிலையம்.. தெலுங்கானா-விற்கு அடித்தது ஜாக்பாட்..!
இந்திய விமானபோக்குவரத்துத் துறை இதுநாள் வரை பணிகள் சேவையை மட்டுமே மையமாக வைத்து இயங்கி வந்தநிலையில், நாட்டின் வளர்ச்சி மற்றும் கட்டமைப்பு வசதிகளைக் கருத்தில் கொண்டு சரக்குப் போக்குவரத்தைப் பிரதானமாகக் கொண்டு இயங்க சில வருடங்களுக்கு முன் திட்டமிட்டது.
இதனை ஏற்று, ஜெட் ஏர்வேஸ், இண்டிகோ, ஏர் இந்தியா போன்ற முக்கிய விமான நிறுவனங்கள் தங்களது சரக்குப் போக்குவரத்தை சேவையை விரிவாக்கம் செய்தது.
இத்திட்டத்தின் அடுத்தகட்டமாக மத்திய அரசு சரக்கு போக்குவரத்திற்காக மட்டும் எனப் பிரத்தியேகமாகப் புதிய விமான நிலையங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. அதுமட்டும் அல்லாமல் இத்திட்டத்தைத் தெலுங்கானா மற்றும் உத்திர பிரதேசத்தில் நிறுவ முடிவு செய்துள்ளது.
வாய்ப்பு..
மத்திய அரசு திட்டத்தை வெளியிட்ட சில நாட்களில் தெலுங்கானா மற்றும் உத்திர பிரதேச மாநில அரசுகள் வரவேற்பு அளித்தது.
இதன் படி தெலுங்கானாவில் ஹைதராபாத்தின் மேற்கு பகுதியிலும், உத்திர பிரதேசத்தில் வடக்குப் பகுதிகளில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மாநில அரசுகள் முடிவு செய்துள்ளது.
தனிக் குழு
இத்திட்டத்தை விரைவாகச் செயல்படுத்தவும், அதற்கான பெயர், இடம், புதிய விமான நிலையத்தை முறையாக அமைக்க வேண்டுமா அல்லது தற்போது இருக்கும் விமான நிலையத்தில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டுமா என்பதை ஆய்வு செய்யவும், முடிவுகளை எடுக்கவும் ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா இரு மாநிலங்களிலும் தனிக்குழுவை அமைத்துள்ளது.
இடம்..
சரக்கு விமான நிலையத்தை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்யப்பட்ட உடன் கட்டமைப்புக்கான பணிகளைத் துவங்கும் என ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
வர்த்தகம்
இதன் வாயிலாக இரு மாநிலங்களும் மிகப்பெரிய அளவிலான வர்த்தகத்தைப் பெற உள்ளது, அதுமட்டும் அல்லாமல் சரக்கு விமான நிலையத்தின் வாயிலாக இந்த மாநிலங்களில் சாலை போக்குவரத்து மிகப்பெரிய அளவில் உயரும்.


Click it and Unblock the Notifications