ஜியோ நிறுவனத்தால் ரூ.4,600 கோடி நஷ்டம்.. ஏர்டெல், ஐடியா கதறல்..!!
டெல்லி: கடந்த சில வருடங்களாக இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி, ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு, மொபைல் பயன்பாடு அதிகரிப்பு எனப் பல காரணங்கள் மூலம் இந்திய டெலிகாம் சந்தை மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது.
டெலிகாம் சந்தை வளர்ச்சி என்றால் டெலிகாம் நிறுவனங்களின் வருமானமும் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்பதே அதன் உண்மையான அர்த்தம். ஆனால் இவை அனைத்தும் ஜியோவின் அறிமுகத்திற்கு முன்னர்.
ஜியோவிற்குப் பின் மொத்த கதையும் மாறியுள்ளதை நீங்களே பாருங்கள்..
முதல் முறையாக
2008-09ஆம் ஆண்டுக்குப் பின் டெலிகாம் நிறுவனங்களின் வருடாந்திர வருமானம் முதல் முறையாகக் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் 1,93,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் 2016-17 நிதியாண்டில் 1,88,000 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த நிதியாண்டிலும் இதன் அளவு 1,84,000 கோடி ரூபாயாகக் குறையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
காரணம்
இந்தத் திடீர் மாற்றத்திற்கு முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் புதிய டெலிகாம் நிறுவனமான ஜியோவின் அறிமுகம், அதன் மலிவான விலை கட்டணங்களுக்கும் தான் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.
தலைகீழாக மாறியது..
ஜியோ அறிமுகத்திற்கு முன் ஏர்டெல், ஐடியா, வோடபோன் உட்பட அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் தங்கள் அளிக்கும் சேவைக்கு மிகப்பெரிய தொகையைக் கட்டணமாக வசூலித்து வந்தது.
ஐியோவின் விலை மலிவான சேவைகள் மற்றும் 6 மாத இலவச சேவைகள் மூலம் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை 70 முதல் 80 சதவீதம் வரையில் குறைத்தது குறிப்பிடத்தக்கது.
அரசு வளர்ச்சி
ஏர்டெல், ஐடியா, வோடபோன் நிறுவனங்கள் தங்களது சேவைக் கட்டணத்தை அதிகளவில் குறைத்தாலும் ஜியோவின் அசுர வளர்ச்சியைக் குறைக்க முடியாத காரணத்தால் ஜியோவின் ஆஃபர்கள், இலவசங்கள் குறித்துத் தொடர்ந்து டெலிகாம் துறை கட்டுப்பாட்டு ஆணையமான டிராய்-யிடம் புகார் அளித்தது வந்தது.
போட்டி நிறுவனங்களின் பெரும்பாலான புகார்களை நிராகரித்த டிராய், ஜியோவின் சம்மர் சம்பரைஸ் ஆஃபர் தடை செய்தது குறிப்பிடத்தக்கது.
பாதிப்பு
ஜியோவின் தொடர் இலவசங்கள், ஆஃபர்கள் மூலம் 100 மில்லியன் வாடிக்கையாளர்களைப் பெற்றாலும், சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வருவாய் இழப்பைச் சந்தித்ததுள்ளது.
4600 கோடி ரூபாய்
2016 செப்டம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஜியோவின் எதிரொலிகளால் இந்திய டெலிகாம் சந்தையில் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தும் சுமார் 4,600 கோடி ரூபாய் இழந்துள்ளது.
இதுமட்டும் அல்லாமல் அடுத்த நிதியாண்டிலும் 4,900 கோடி ரூபாய் வருவாய் இழப்பை டெலிகாம் நிறுவனங்கள் சந்தித்தும் எனக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.
இணைப்புகள்
இந்தப் பாதிப்புகளை எதிர்கொள்ளவே டெலிகாம் நிறுவனங்கள் இணைப்பில் ஈடுபட்டு வருகிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் உடன் ஏர்செல், எம்டிஎஸ்,
ஜடியா உடன் வோடபோன்
ஏர்டெல் உடன் டெலிநார் ஆகிய நிறுவனங்கள் இணையத் துவக்கியுள்ளது.
2021இல்...
இன்றைய நாள் வரை இந்திய டெலிகாம் துறையின் அதிகப்படியான வருமானத்தின் அளவு 1,93,000 கோடி ரூபாயாக இருக்கும் நிலையில், 2021ஆம் ஆண்டு இதன் அளவு 3,00,000 கோடி ரூபாயாக உயரும்.
மேலும் இக்காலகட்டத்தில் வாய்ஸ் கால் வருமானம் 1,50,000 கோடியில் இருந்து வெறும் 50,000 கோடி ரூபாயாகக் குறையும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
புரட்சி
இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோவின் அறிமுகம் புரட்சியாகப் பார்க்கப்படும் நிலையில், ஜடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களின் இணைப்பிற்குப் பின் இந்தியாவில் மிகப்பெரிய புரட்சியாக இருக்கும் என CLSA ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications