வியாழக்கிழமை மாலையில் டிசிஎஸ் நிறுவனம் தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்ட நிலையில், வெள்ளிக்கிழமை இன்போசிஸ் 2017ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
டிசிஎஸ் சந்தை கணிப்புகளுக்கும் குறைவாக லாபத்தை அடைந்த நிலையில், இன்போசிஸ் கணிப்புகளுக்கும் அதிகமான லாபத்தை பெற்று சந்தை முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.
லாபம்
நாட்டின் 2வது மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் ஜூன் காலாண்டில் சுமார் 3,483 கோடி ரூபாய் அளவில் லாபத்தை பெற்றுள்ளது. இது கடந்த காலாண்டை விடவும் சுமார் 3.33 சதவீதம் அதிகமாகும்.
சந்தை கணிப்புகளில் இதன் அளவு 3,429 கோடி ரூபாயாக இருக்கும் என கணிக்கப்பட்ட நிலையில், சுமார் 50 கோடி ரூபாய் அதிக லாபத்தை பெற்றுள்ளது.
வருவாய்
மார்ச் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் வெறும் 17,120 இருந்த நிலையில் ஜூன் காலாண்டில் வருவாய் அளவு கணிசமாக குறைந்து 17,078 கோடி ரூபாயாக உள்ளது.
மேலும் இக்காலண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை 3.2 சதவீதம் அளவிற்கு உயர்ந்து டாலர் - ரூபாய் மதிப்பீட்டில் ஏற்பட்ட சரிவை ஈடு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள்
ஜூன் காலாண்டில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் சுமார் 59 வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 71 என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முக்கியமாக 25 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் சுமார் 6 வாடிக்கையாளர்களை பெற்று இன்போசிஸ் அசத்தியுள்ளது.
உலகளாவிய சந்தை
இந்தியாவில் மட்டும் இன்போசிஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் சுமார் 11.20 சதலீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. அதை தொடர்ந்து ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் அதிகளவிலான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
பிற நாடுகளில் இதன் ஒட்டுமொத்த சந்தை வளர்ச்சி 7.3 சதவீதமாக உள்ளது.
ஊழியர்கள் வெளியேற்றம்
பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வரும் இன்போசிஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் வெளியேற்ற விகிதம் 21 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதுமிகவும் அதிகமான அளவு, இதனால் இன்போசிஸ் நிலையான சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிப்பது தொய்வு ஏற்படும்.
ஊழியர்கள் எண்ணிக்கை
ஜூன் காலாண்டில் இந்நிறுவனத்தில் சுமார் 8,645 ஊழியர்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் இன்போசிஸ் நிறுவனத்தின் மொத்த ஊழியர்கள் எண்ணிக்கை 1,98,553 ஆக உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications