மத்திய அரசு பினாமி சொத்துக்கள் குறித்த தகவலை ரகசிய உளவாளியாக விசாரணை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தால் ஒரு கோடி ரூபாய் வரை பரிசு தொகை அளிக்கலாம் என்று திட்டமிட்டுள்ளது.
இதற்கான அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளிவரலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பரிசுத் தொகை வரம்பு
மத்திய நேரடி வரி விதிப்பு ஆணையத்தின் கீழ் வேலை பார்த்து வரும் பெயர் கூற விரும்பாத அந்த மூத்த அதிகாரி அளித்த தகவலின் படி துப்பு கொடுப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் முதல் 1 கோடி ரூபாய் வரை பரிசு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
ரகசியமாகக் காக்கப்படும்
துப்பு கொடுக்கும் நபர் அளிக்கும் விவரங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்றும் யார் இந்த விவரங்களை அளித்தார்கள் என்ற விவரங்கள் ரகசியமாகக் காக்கப்படும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஏற்கனவே இருக்கும் முறை
சென்ற ஆண்டுப் பினாமி சட்டம் கொண்டு வந்ததில் இதுபோன்ற திட்டங்கள் இல்லை. ஆனால் அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித் துறை துப்பு அளிக்கும் போது பரிசுகள் அளிப்பது தொடர்ந்து வருகின்றது. சில நேரங்களில் இந்தப் பரிசுகள் அவ்வளவு லாபகரமானதும் இல்லை.
அதிகப் பரிசு
எனவே இதுபோன்று அதிகளவில் பரிசு தொகை அளித்தால் பினாமி சொத்துக்கள் குறித்துப் பல விவரங்கள் வெளியில் வரும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கின்றது.
அனுமதிக்குக் காத்திருப்பு
தற்போது இதற்கான கொள்கை கோப்புகள் நிதி அமைச்சகத்தில் உள்ளது. இதற்கான ஒப்புதல் நிதி அமைச்சகத்தில் இருந்து பெற்றவுடன் அக்டோபர் இறுதி அல்லது நவம்பர் முதல் வாரத்தில் இதற்கான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
பினாமி சட்டம்
பினாமி சொத்துத் தடுப்பு சட்டமானது 2016ம் ஆண்டு நவம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
திருத்தப்பட்ட பினாமி சட்டம் அமலுக்கு வந்த பிறகு பல பினாமி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டு வங்கி கணக்கு, சொத்துக்கள் போன்றவற்றைப் பரிமுதல் செய்து நடவடிக்கைகள் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications