இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்ற திட்டமிட்டு, இணைவதற்கான பணிகளைத் தொடர்ந்து செய்து வந்த நிலையில் தற்போது இந்நிறுவனத்திற்குக் கடன் கொடுத்த வங்கிகள் மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் செய்த சில தடை மற்றும் காலதாமதத்தால் இரு நிறுவனங்களின் இணைப்புத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனில் அம்பானி
முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அளித்து வரும் மலிவான டெலிகாம் சேவையின் மூலம் இத்துறையில் இருக்கும் அனைத்து நிறுவனங்களும் அதிகளவிலான நஷ்டத்தைச் சந்தித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்-ம் இதில் பாதிக்கப்பட்டது.
அனில் தலைமையில் இயங்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் சுமார் 45,000 கோடி ரூபாய் கடனில் உள்ளது.
சொத்துக்கள் விற்பனை
ஜியோ-வின் பாதிப்பு மற்றும் கடன் அளவை குறைக்கவே ஆர்காம், ஏர்செல் நிறுவனத்தை வாங்க திட்டமிட்டது. இந்நிலையில் கடன் கொடுத்த வங்கிகள் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், கடனை அடைக்க வேறு வழியைக் கையாள முடிவு செய்துள்ளது ஆர்காம்.
இதன் ஒரு பகுதியாக இந்நிறுவனத்திற்குச் சொந்தமான சில ரியல் எஸ்டேட் சொத்துக்களையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது ஆர்காம் நிர்வாகம்.
டவர் வர்த்தகம்
ஆர்காம் ஏர்செல் நிறுவன இணைப்பு சாத்தியமாவதன் மூலம், ஆர்காம் நிறுவனத்தின் இருக்கும் டவர் வர்த்தகம் மற்றும் சொத்தை விற்பனை செய்துவிட்டு, தனது 45,000 கோடி ரூபாய் கடனை அடைக்க முடிவு செய்திருந்தது.
இணைப்பு முறிந்ததால் டவர் வர்த்தகத்தின் விற்பனையும் முடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
11,000 கோடி ரூபாய்
ஆர்காம் தனது டெலிகாம் டவர் வர்த்தகம் மற்றும் சொத்துக்கள் நிறுவனத்தின் 51 சதவீத பங்கை கடனா நாட்டின் ப்ரூக்பீல்டு இன்பராஸ்டக்சர் நிறுவனத்திற்கு விற்பனை செய்ய முடிவு செய்திருந்தது. இதன் மூலம் சுமார் 11,000 கோடி ரூபாய் நிதியை திரட்ட முடியும் என மிகப்பெரிய அளவில் நம்பியது ஆர்காம்.
60 சதவீத கடன்
ஏர்செல் உடன் இணைப்பு மற்றும் டவர் நிறுவனத்தின் விற்பனையின் மூலம் ஆர்காம் நிறுவனத்தின் 60 சதவீத கடனை தீர்க்க முடியும் எனத் திட்டமிட்ட அனில் அம்பானிக்கு வங்கிகளின் மறுப்பு மிகப்பெரிய முட்டுக்கட்டையாக விளங்குகிறது.
இணைப்பின் முறிவு..
இந்த இணைப்பின் முறிவு இரு தரப்பு மத்தியிலும் ஒப்புதல் பெற்று முடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஆதிக்கம்..
ஆர்காம் மற்றும் ஏர்செல் நிறுவனத்தின் இணைப்பு மூலம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் ஆதிக்கம் அதிகளவில் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த இணைப்புத் திட்டத்தைக் கைவிட்டதன் மூலம் ஜியோவிற்குச் சந்தையில் கூடுதலான வாய்ப்புகளை உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications