டாடா குழுமத்தின் டெலிகாம் சேவையை வழங்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் வையர்லெஸ் வர்த்தகத்தை முழுமையாகப் பார்தி ஏர்டெல் கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் டாடா சேவை வழங்கி வரும் 19 வட்டங்களிலும் இனி ஏர்டெல் வர்த்தகம் செய்ய முடியும்.
டாடா டெலிசர்வீசஸ் 31,000 கோடி ரூபாய் கடனில் இருந்தாலும், ஏர்டெல் இந்நிறுவனம் வைத்துள்ள ஸ்பெக்ட்ரத்திற்கான நிலுவை தொகை மட்டும் கொடுத்து மொத்த வர்த்தகத்தையும் பெற்றுள்ளது. இதனால் ஏர்டெல் நிறுவனத்திற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை.
இரு நிறுவங்கள் மத்தியிலான இந்த ஒப்பந்தம் ஏர்டெல் நிறுவனத்திற்குப் பங்குச்சந்தையில் மகிப்பெரிய உயர்வை அளித்துள்ளது.
பங்குச்சந்தையில் உயர்வு
ஏர்டெல் நிறுவனம் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியதை அடுத்து இன்றைய மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் 7.98 சதவீதம் வரை உயர்ந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.
இதன் மூலம் இன்று ஏர்டெல் நிறுவன பங்கு மதிப்பு 432 ரூபாய் வரை உயர்ந்து காணப்பட்டது.
ஏர்டெல்
இன்றைய உயர்வுடன் ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகள் இந்த வருடம் சுமார் 40 சதவீதம் அளவிலான உயர்வை அடைந்துள்ளது. அதேபோல் டாடா டெலிசர்வீசஸ்(TTML) நிறுவனத்தின் பங்கு மதிப்பு 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்த வருடம் மட்டும் TTML நிறுவனம் 20 சதவீதம் வரை குறைந்து காணப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய லாபம்..
இந்த ஒப்பந்தம் ஏர்டெல் நிறுவனத்திற்கு வர்த்தக ரீதியிலும், பண ரீதியிலும், சந்தையில் ஜியோ உடன் போட்டி போட மிகப்பெரிய வாயப்பாக இருக்கும் என நம்பப்படுகிறது.
சந்தை பங்கீடு
டாடா டெலிசர்வீசஸ் சுமார் 44 மில்லியன் வாடிக்கையாளர்களுடன் சுமார் 5 சதவீத சந்தை வர்த்தகத்தைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இது உண்மையில் ஏர்டெல் நிறுவனத்திற்கு வலிமை சேர்க்கும் என நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications