இலவசம் என்ற பெயரில் சேவையைத் துவங்கி ஒரு வருடத்திற்குள்ளேயே சுமார் 13 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்ற ரிலையன்ஸ் ஜியோ ஏப்ரல் 1 முதல் சேவைக்கான கட்டணத்தை வசூல் செய்யத் துவங்கியது.
சந்தையில் இருக்கும் பிற போட்டி நிறுவனங்களை விடவும் குறைவான கட்டணத்தில் சேவை அளித்தாலும், ஒவ்வொரு 3 மாதத்திற்கும் அதிகமான அளவில் கட்டணத்தை உயர்த்தி வருகிறது. இது போட்டி நிறுவனங்களுக்கும் தற்போது சாதகமாக அமைந்து வருகிறது.
கட்டண உயர்வு
ரிலையன்ஸ் ஜியோ தனது சேவைக் கட்டணத்தை 36%, 26% என்று கடந்த இரண்டு முறை உயர்த்தியுள்ள நிலையில் இந்த முறை 15 சதவீதம் மட்டுமே உயர்த்தியுள்ளது.
போட்டி நிறுவனங்கள்
இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் ஏர்டெல், வோடபோன், ஐடியா, ஏர்செல் போன்ற நிறுவனங்களுக்கு ஜியோவின் தொடர் கட்டண உயர்வு மூச்சுவிடச் சற்று வாய்ப்பை அளிக்கும் நிலையில், கூடுதலான பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
ஜிஎஸ்டியின் அமலாக்கம், டெலிகாம் கட்டுப்பாட்டு ஆணையம் IUC கட்டணத்தில் செய்த 57 சதவீத குறைப்பு ஆகியவை ஜியோ தவிர டெலிகாம் நிறுவனங்களின் வருவாயை அதிகளவில் பாதிக்கிறது.
டிசம்பர் காலாண்டு
இதன் மூலம் டிசம்பர் காலாண்டில் அனைத்து முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் லாப அளவீடுகளும் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக, பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் டெலிகாம் நிறுவனங்கள் மீது முதலீடு செய்யும் முன் சற்றுக் கவனமாக இருக்க வேண்டும்.
பட்டையைக் கிளப்பும் ஜியோ
ஜியோ நிறுவனம் தொடர்ந்து கட்டணத்தை உயர்த்தினாலும் வாடிக்கையாளர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து கிடைக்கும் சராசரி வருமானத்தின் அளவு அக்டோபர் மாதத்தில் 141ஆக உயர்ந்துள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில் இது 72 ரூபாயாக மட்டுமே இருந்த நிலையில், அக்டோபர் மாதத்தில் இது 141 ஆக உயர்ந்துள்ளது.
பிற நிறுவனங்கள்
ஏர்செல் ஜூன் காலாண்டில் 52.37 ரூபாய் மட்டுமே ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து வருமானமாகப் பெற்றுள்ளது.
இதுவே ஐடியா செல்லுலார் 104.87 ரூபாயும், வோடபோன் 112.26 ரூபாயும், பார்தி ஏர்டெல் 113.50 ரூபாயும், டெலிநார் 100.03 ரூபாயும் சராசரி வருமானமாகப் பெற்றுள்ளது.
இக்காலகட்டத்தில் ஜியோ 110 ரூபாய் வருமானமாகப் பெற்றுள்ளது.
ஜியோ டாப்புதான்
சந்தையில் காலகாலமாக இருக்கும் முன்னணி நிறுவனங்களுக்கு இணையான வருமானத்தை ஜியோ தனது மலிவான சேவை கட்டணத்தின் வாயிலாகவே பெற்றுள்ளது.
அடுத்தடுத்த திட்டம்
ஜியோவின் நிலையான சலுகை மற்றும் தொடர் வாடிக்கையாளர்களைச் சேர்க்கும் உக்தி இந்நிறுவனத்தை அடுத்தச் சில வருடங்களில் நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக உயர்த்தும் எனப் பல்வேறு சந்தை ஆய்வு நிறுவனங்கள் கூறுகிறது.
IUC கட்டணம்
செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஜியோ பிற டெலிகாம் நிறுவனங்களுக்காகச் சுமார் 2,100 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. டிராய்-இன் கட்டண குறைப்பின் மூலம் ஜியோவின் செலவுகள் சற்று குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன நடக்கும்..
ஆனால் ஜியோ இந்திய டெலிகாம் சந்தையில் ஆதிக்கம் நிறைந்த முதல் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் முதல் இடத்தைப் பிடிக்கும்போது இப்படித் தொடர்ந்து தனது கட்டண உயர்வின் மூலம் இன்னும் சில வருடங்களில் சந்தையில் இருக்கும் பிற நிறுவனங்களுக்கு இணையாக அல்லது அதிகமான கட்டணத்தையும் வசூலிக்கும் எனவும் சில கணிப்புகள் கூறுகிறது.


Click it and Unblock the Notifications