வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்வதற்கு முன், உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் உங்கள் பயணத்திட்டங்கள் குறித்துத் தெரிவிக்க வேண்டியது அவசியம்.
வெளிநாட்டுப் பயணம் என்பது அதிகச் செலவு பிடிக்கக்கூடியது. பயணச் செலவில் பெரும்பகுதியான பயணச்சீட்டுப் பதிவு, தங்கும் விடுதி பதிவு போன்றவற்றிற்கான செலவை பயணம் கிளம்புவதற்கு முன்பே செய்திருந்தாலும், நீங்கள் செல்லும் இடத்திலும் ஏராளமான ட்ரான்ஸாக்ஷன்களை மேற்கொள்ளக்கூடும்.
பயணச் செலவு
பணமாகச் செலவழிப்பதை முற்றிலுமாகத் தவிர்க்க இயலாது என்றாலும் கிரெடிட் கார்டு உபயோகிப்பது உங்கள் பயணத்தை இலகுவாகும். உங்களுக்குத் தேவைப்படக்கூடிய மொத்தப் பணத்தையும் மாற்றி எடுத்துக்கொண்டு போக வேண்டும் என்று கவலைப்படத் தேவையில்லை.
திருட்டுப் பயம் இல்லை
பணமாகக் கொண்டு போனால் எளிதில் திருடு போகவோ அல்லது தொலைந்து போகவோ வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க கிரெடிட் கார்டு எடுத்துக் கொண்டு போவது பாதுகாப்பானது. ஒருவேளை கிரெடிட் கார்டு தொலைந்து விட்டாலும் கூட, உடனடியாகக் கிரெடிட் கார்டு நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு கார்டை செயல்படாமல் முடக்க முடியும்.
பணம் செலவு செய்தாலும் கிரெடிட் கார்டு தேவை
வெளிநாட்டுப் பயணத்தில் முழுக்கப் பணமாகவே செலவழிப்போருக்கும் மேலதிக செலவுகளைச் சமாளிப்பதற்குக் கிரெடிட் கார்டு மிகவும் உபயோகமாய் இருக்கும். எனினும், அதனைச் சிறப்பாக உபயோகிப்பதற்கு, பின் வருவனவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
சர்வதேச பரிவர்த்தனைக்கு ஏற்ற கிரெடிட் கார்டு
உங்கள் கிரெடிட் கார்டு சர்வதேச அளவில் செல்லுபடியாகுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இப்போதெல்லாம் பெரும்பாலான கிரெடிட் கார்டுகள் சர்வதேச அளவில் செல்லுபடியாகக்கூடியதாகவே உள்ளன; இருந்தாலும் நீங்கள் பயணத்திற்குக் கிளம்பும் முன் உங்கள் வங்கியை அணுகி அதனை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. சர்வதேச அளவில் ஒப்புக்கொள்ளப்படாத அடிப்படை கார்டை நீங்கள் வைத்திருப்பின், உங்கள் ட்ரான்ஸாக்ஷன் நிராகரிக்கப்பட்டு, பெரும் பண நெருக்கடியில் மாட்டிக் கொள்வீர்கள்.
உங்கள் பயணத் திட்டத்தைப் பற்றி உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் தெரிவியுங்கள்
வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொள்வதற்கு முன், உங்கள் பயணத் திட்டத்தைப் பற்றி உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்திடம் தெரிவிக்க வேண்டியது முக்கியம். அவ்வாறு தெரிவிப்பது சர்வதேச பயன்பாட்டுக்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்க உதவுவதோடு தடையில்லா சேவைகள் கிடைக்கவும் வழிவகுக்கும். கிரெடிட் கார்டில் வழக்கத்திற்கு மாறாக, அதிகமான ட்ரான்ஸாக்ஷனோ அல்லது சர்வதேச அளவில் வித்தியாசமான ட்ரான்ஸாக்ஷனோ செய்யப்பட்டிருந்தால், கிரெடிட் கார்டு வழங்கிய நிறுவனத்தார் அந்த ட்ரான்ஸாக்ஷனை உறுதி செய்யும்படி கார்டு வைத்திருப்பவர்க்கு அறிவுறுத்துவர். உங்கள் பயணத்திட்டங்களைப் பற்றி வங்கிக்குத் தெரிவிக்காத பட்சத்தில், உங்கள் ட்ரான்ஸாக்ஷனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வங்கி உங்களைத் தொர்பு கொள்ளக்கூடும். உங்கள் ஃபோனை தொடர்பு கொள்ள இயலவில்லையெனில், பாதுகாப்புக் கருதி உங்கள் சர்வதேச ட்ரான்ஸாக்ஷனை அது நிராகரித்து விடக்கூடும்.
நீங்கள் செலவு செய்யக்கூடிய வரம்பை அறிக
நீங்கள் கிளம்புவதற்கு முன் உங்கள் கிரெடிட் வரம்பு எவ்வளவு என்பதை நன்கு விசாரித்துத் தெரிந்து கொள்ளுங்கள். சர்வதேச ட்ரான்ஸாக்ஷன்கள் பெரும்பாலும் அதிகத் தொகையை உள்ளடக்கியதாக இருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு, உங்கள் கார்டு மூலம் செலவு செய்வதற்கான வரம்பை தேவைக்குத் தகுந்தவாறு உயர்த்திக் கொள்வதைப் பற்றிப் பரிசீலனை செய்யுங்கள். உங்கள் கார்டின் கிரெடிட் வரம்பு மீறப்பட்டால், கார்டு மூலம் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்கள் நிராகரிக்கப்பட்டு விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
உங்களுக்கான கூடுதல் கட்டணங்கள் பற்றி அறிக
கிரெடிட் கார்டு மூலம் வெளிநாட்டில் செய்யப்படும் ட்ரான்ஸாக்ஷன்களைப் பொறுத்தவரை, கார்டுக்கு சில கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். சில கார்டுகளுக்கு, வெளிநாட்டில் செய்யப்படும் ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் அயல்நாட்டு ட்ரான்ஸாக்ஷன் கட்டணம் இவ்வளவு என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ட்ரான்ஸாக்ஷனுக்கும் இக்கட்டணம் 2.5% மற்றும் 3.5% ஆகியவற்றிற்கு இடைப்பட்ட சதவீதத்தில் விதிக்கப்படுகிறது. இது போன்ற கட்டணங்கள் ஏதும் உங்கள் கார்டுக்கு உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அத்தகைய கட்டணங்கள் இருப்பின், அயல்நாட்டு ட்ரான்ஸாக்ஷன் கட்டணம் இல்லாத கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பியுங்கள்.
கரன்ஸி மாற்றுக் கட்டணம்
உங்கள் கிரெடிட் கார்டு இந்தியப் பணத்தில் வழங்கப்பட்டிருப்பதால் பணத்தை மாற்றுவதற்கான கட்டணமும் வசூலிக்கப்படக்கூடும். வெளிநாட்டில் நீங்கள் ட்ரான்ஸாக்ட் செய்யும்போது அப்போதைய நிலவரப்படியிலான எக்ஸ்சேஞ்ச் ரேட்டிலேயே பண மாற்றம் செய்யப்படும். அயல்நாட்டுப் பணத்தைக் கொண்டு ஒரு ட்ரான்ஸாக்ஷனுக்குப் பணம் செலுத்த வேண்டுமெனில், உங்கள் கிரெடிட் கார்டு நிறுவனத்தார் அத்தகைய பண மாற்றத்திற்குக் கட்டணம் விதிப்பர்.
அட்வான்ஸ் கேஷ் கட்டணம்
சர்வதேச ஏடிஎம் ஏதேனும் ஒன்றிலிருந்து பணம் எடுக்க உங்கள் கிரெடிட் கார்டை நீங்கள் உபயோகிக்கும் பட்சத்தில் காஷ் அட்வான்ஸ் கட்டணம் உங்களுக்கு விதிக்கப்படும். இந்தக் கட்டணம் 1% முதல் 4% வரை இருக்கக்கூடும்.
கார்டு மோசடிகள் ஜாக்கிரதை
போலி கிரெடிட் கார்டுகள், கிரெடிட் கார்டு தகவல்களைத் திருடுதல், மோசடியான ட்ரான்ஸாக்ஷன்கள் போன்றவை சில குறிப்பிட்ட நாடுகளில் வழக்கமான நிகழ்வுகள். எனவே, வெளிநாடுகளில் உங்கள் கிரெடிட் கார்டை உபயோகிக்கும்போது உஷாராக இருந்து இத்தகைய மோசடிகளில் மாட்டிக் கொள்ளாமல் தவிருங்கள்.
திட்டமிடுங்கள்
கிரெடி கார்டுகள் ட்ரான்ஸாக்ஷன்களை எளிதாக்குகின்றன. வெளிநாட்டுப் பயணத்தின் போது கிரெடிட் கார்டை புத்திசாலித்தனமாக உபயோகித்தால் அது வீண் செலவுகளைக் குறைத்து உங்கள் பயணத்தை இனிதாக்கும். என்றாலும், நீங்கள் பயணத்துக்குக் கிளம்புவதற்கு முன்பே எத்தகைய சாதனத்தின் மூலம் உங்கள் செலவுகளை மேற்கொள்ளப் போகிறீர்கள் என்பதைத் தெளிவாகத் தீர்மானித்துக் கொண்டால் தான் பயணத்தின் போது எவ்வித கவலையுமின்றி இருக்க முடியும்.


Click it and Unblock the Notifications