நாட்டின் முன்னணி வங்கிகளில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கி செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் சந்தை கணிப்புகளை விடவும் அதிகமான அளவிற்கு லாபத்தில் சரிவை சந்தித்துள்ளது.
இதனால் வங்கித்துறை பங்குகளில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் திங்கட்கிழமை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் எந்த அளவிற்கும் சரியும் என்ற அச்சத்தில் உள்ளனர்.
லாபம்
செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் ஐசிஐசிஐ வங்கியின் லாப அளவு 33.7 சதவீதம் குறைந்து 2,058.19 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது. கடந்த நிதியாண்டில் இதன் அளவு 3,102.27 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இக்காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி 2,570.10 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் பெறும் எனக் கணிப்புகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது கணிப்புகளை விடவும் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் குறைவாகப் பெற்றுள்ளது.
வட்டி வருமானம்
கடந்த வருடம் இவ்வங்கியின் வட்டி வருமானம் 5,253.27 கோடி ரூபாயாக இருந்த நிலையில் இக்காலாண்டில் 8.7 சதவீதம் உயர்ந்து 5,709.07 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
ஆனால் பிற வருமானங்களின் அளவீடுகள் 9,119.68 கோடி ரூபாயில் இருந்து 5,186.24 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
பங்கு விற்பனை
கடந்த நிதியாண்டில் இதே காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி தனது இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பங்குகளை விற்பனை செய்த காரணத்தால் அதிகளவிலான வருமானத்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
போட்டி வங்கிகள்
இக்காலாண்டில் ஐசிஐசிஐ வங்கி, சந்தையில் இருக்கும் ஆக்சிஸ் வங்கி மற்றும் யெஸ் வங்கிகளைப் போல அதிகளவிலான வராக்கடனை அறிவிக்கவில்லை.
இதனால் முதலீட்டாளர்கள் முன்னிலையில் பங்கு மதிப்பு சரிவை காப்பாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வராக் கடன்
2018ஆம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இவ்வங்கியின் வராக்கடன் 4,976 கோடி ரூபாயாக உயர்ந்தது, ஆனால் இக்காலாண்டில் 4,674 கோடி ரூபாய் அளவில் மட்டுமே உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் மொத்த வராக்கடன் அளவு 44,488.54 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 36.7 சதவீதம் உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications