ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் உடன் மல்லுக்கட்டி வரும் பிளிப்கார்ட், புதிய வர்த்தகச் சேவையைத் துவங்கியுள்ளது. கடந்த சில வருடங்களாகவே ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஆன்லைனில் மளிகை பொருட்களின் விற்பனையைத் துவங்க முயற்சி செய்து வந்த நிலையில் பிளிப்கார்ட், அமேசான் போன்ற நிறுவனங்கள் பல தடைகளைச் சந்தித்தது.
இந்நிலையில் தற்போது பிளிப்கார்ட் சூப்பர்மார்ட் என்ற புதிய ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனையைத் துவங்கியுள்ளது.
பெங்களூரு
பிளிப்கார்ட் தனது புதிய சூப்பர்மார்ட் சேவையை முதல் கட்டமாகவும், சோதனை திட்டமாகவும், பெங்களூரில் மட்டும் அளிக்க முடிவு செய்துள்ளது. இதன் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த முக்கிய வர்த்தகச் சந்தையிலும் இந்தச் சேவை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதமே பிளிப்கார்ட் இந்தச் சேவையைத் தனது நிறுவன ஊழியர்களுக்கு மட்டும் அளித்து இதன் வர்த்தக முறையை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.
குறைந்தபட்ச தொகை
பிளிப்கார்ட்-இன் இந்தச் சூப்பர்மார்ட் சேவை தற்போது மொபைல் ஆப் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. மேலும் இந்தச் சேவையின் மளிகை பொருட்களை ஹோம் டெலிவரி செய்ய வேண்மெனில் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 500 ரூபாய்க்குப் பொருட்களை ஆர்டர் செய்ய வேண்டும்.
இலவசமாக ஹோம் டெலிவரி பெற 1000 ரூபாய்க்கு அதிகமான தொகைக்கு ஆர்டர் செய்ய வேண்டும்.
2வது முயற்சி
பிளிப்கார்ட் நிறுவனம் 2015ஆம் ஆண்டு நியர்பை எனச் செயலி மூலம் ஏற்கனவே ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் டெலிவரி பணியைச் செய்து வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இந்தச் சேவையைச் சில மாதங்களுக்குப் பின்பு மூடியது குறிப்பிடத்தக்கது.
அமேசான்
அமெரிக்காவில் அமேசான் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் டெலிவரியில் கொடிக்கட்டி பறக்கும் நிலையில் இந்தியாவில் இதன் சேவை துவங்கி முதலே இப்பரிவில் தனிக் கவனத்தைச் செலுத்தி வருகிறது.
அமேசானுக்குப் போட்டியாகவே தற்போது பிளிப்கார்ட் இந்தச் சூப்பர்மார்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.
பேடிஎம்
பிளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களைக் கவர்ச்சிகரமான ஆஃபர்களைக் கொடுத்துப் பேடிஎம் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்நிலையில் ஆன்லைன் மளிகை பொருட்கள் விற்பனை மற்றும் டெலிவரியில் இறங்க திட்டமிட்ட பேடிஎம், இந்தியாவில் இத்துறையில் வெற்றியை கண்டுள்ள பிக்பேஸ்க்ட் நிறுவனத்தில் முதலீடு செய்து இந்நிறுவனத்தின் சேவை பேடிஎம் மால் செயலி வழியாகத் தருகிறது.


Click it and Unblock the Notifications