ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் இந்தியாவில் கார் உற்பத்தி சந்தையும், கார் விற்பனையும் பாதிக்கப்பட்டுள்ளதை நாம் மறுக்க முடியாது. குறிப்பாகச் சென்னையில் இருக்கும் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில், முழுமையாகத் தயாரிக்கப்பட்ட கார்களின் இருப்பு எண்ணிக்கை விற்கப்படாமல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் ஜனவரி முதல் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இதனால் புதிதாகக் கார் வாங்கத் திட்டமிடுவோர் கவனமாகச் செயல்பட வேண்டியுள்ளது.
இந்தத் திடீர் விலை உயர்வுக்கு என்ன காரணம்..?
காரணம்
கார்கள் தயாரிப்புக்கான உள்ளீடு பொருட்களின் விலை அதிகரித்துள்ள காரணத்தால் கார்களின் மீதான லாப அளவுகள் அதிகளவில் குறைந்து வருகிறதாகவும், இதனைக் கட்டுப்படுத்த கார்களின் மீதான விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது கார் தயாரிப்பு நிறுவனங்கள்.
இதன் படி சில முக்கிய நிறுவனங்கள் அளித்துள்ள விலை வித்தியாச அளவீடுகள்.
டோயோட்டா
ஜனவரி முதல் டோயோட்டா கிரிலோஸ்கார் தனது கார்களின் விலையை 3 சதவீதம் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது, அதாவது கிட்டத்தட்ட 5,000 ரூபாயில் இருந்து 1.1 லட்சம் ரூபாய் வரையில் இந்நிறுவனத்தின் கார் தயாரிப்புகளின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்திரா அண்ட் மஹிந்திரா
ஸ்கார்பியோ, டியூவி, வெரிட்டோ மற்றும் எலக்ட்ரிக் கார்கள் எனப் பல வெற்றி மாடல்களைக் கொண்டுள்ள மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் ஜனவரி முதல் தனது தயாரிப்புகளின் விலையை 7,000 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
ஹோண்டா
இந்திய நிறுவனங்களுக்குப் போட்டியாக ஹோண்டா இந்தியாவில் தனது தயாரிப்புகளை அதிகளவில் விற்பனை செய்து வருகிறது. இதற்கு முக்கியக் காரணம் இந்நிறுவன தயாரிப்புகளின் மீதான மக்களின் நம்பிக்கை.
இந்நிலையில் 2018 ஜனவரி மாதம் முதல் தனது தயாரிப்புகளின் விலையை 25,000 ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
ஸ்கோடா
சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட புதிய ஆக்டேவியா மற்றும் ரேபிட் கார்கள், கார் பிரியர்கள் மத்தியில் அதிகளவில் பேசப்பட்ட ஒன்றாக உள்ளது. இதுமட்டுமல்லாமல் இதன் புதிய வடிவமைப்பிலான கார்களின் விற்பனை எண்ணிக்கையும் சற்று அதிகமாக இருந்தது.
இந்நிலையில் இந்நிறுவனத்தின் கார்களின் விலையை ஜனவரி முதல் 14,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஈசுசூ
ஆட்டோமொபைல் சந்தையில் மிதமான வேகத்தில் வளர்ந்து வரும் ஈசுசூ தனது தயாரிப்புகளின் விலையை 1 லட்சம் ரூபாய் வரையில் உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.
வோக்ஸ்வாகன்
ஸ்கோடா நிறுவனத்தின் தாய் நிறுவனமான வோக்ஸ்வாகன் ஜனவரியில் விலை உயர்த்தும் திட்டம் இருப்பதாகவும், இதைப்பற்றிய ஆலோசனை நடத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஆண்டு இறுதி வருமானம்..
மேலும் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் ஆண்டின் கடைசி மாதத்தில் இருப்பு அளவுகளைக் குறைக்க டிசம்பர் மாதத்தில் தள்ளுபடிகளை அறிவித்துக் கார்களை விற்பனை செய்யும்.
இந்த முறை ஜனவரி மாதத்தில் விலை உயர்த்தும் நிலையில் கார் வாங்கத் திட்டமிடுவோர், முன்கூட்டியே திட்டமிட்டுக் கார்களைப் புக் செய்தால் சில ஆயிரங்களைச் சேமிக்கலாம்.
விலை உயர்த்தும் திட்டமில்லை..
இந்தியாவில் அதிகளவிலான கார்களைத் தயாரித்து விற்பனை செய்து வரும் மாருதி சுசூகி மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்கள் கார்களின் விலையை உயர்த்தத் திட்டமில்லை என அறிவித்துள்ளது.
இதனுடன் மெர்சிடீஸ் பென்ஸ், ஜாகுவார் லேண்டு ரோவர், ஆடி ஆகிய நிறுவனங்களும் விலை உயர்த்தும் திட்டமில்லை என் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications