இந்திய மக்கள் மத்தியில் விமானப் பயணம் செய்ய ஆர்வத்தைத் தூண்டும் வகையில் முதல் முறையாக மலிவான கட்டணத்தில் சேவையைத் துவங்கிய ஏர் டெக்கான் நிறுவனம் தனது சேவையை மீண்டும் துவங்குகிறது.
இந்நிறுவனத்தின் பிரபலமான 1 ரூபாய் திட்டத்தை மீண்டும் அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
கிங்பிஷர் ஏர்லையன்ஸ்
ஏர் டெக்கான் நிறுவனத்தை ஜி.ஆர் கோபிநாத் 2003ஆம் ஆண்டுத் துவங்கினார், மக்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் மலிவான சேவைகள் பெரிய அளவில் வெற்றிபெற்ற நிலையில் பெரிய அளவிலான கூட்டணியை அமைக்க 2008ஆம் ஆண்டு விஜய் மல்லையாவின் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் உடன் கூட்டணி வைத்தார்.
2012இல் முடக்கம்..
கிங்பிஷர் நிறுவனத்தில் வர்த்தகம் ஏதுமில்லாத காரணத்தாலும், அதீத நிதி நெருக்கடியின் காரணமாகவும் கிங்பிஷர் ஏர்லையன்ஸ் 2012ஆம் ஆண்டு முடங்கியது.
மீண்டும் துவக்கம்..
இந்நிலையில் ஏர் டெக்கான் நிறுவனம் தனது 2வது ஆட்டத்தை ஆட முடிவு செய்து மீண்டும் வர்த்தகத்திற்கு இறங்கியுள்ளது.
இதன் மூலம் வருகிற டிசம்பர் 22ஆம் தேதி முதல் தனது சேவையைத் துவக்க அனைத்துப் பணிகளும் நடைபெற்று வருகிறது.
4 இடங்கள்
ஏர்டெக்கான் நிறுவனத்தின் 2வது இன்னிங்சில், துவக்கத்திலேயே இந்தியா முழுவதும் சேவை அளிக்காமல் 4 இடங்களில் இருந்து மட்டும் சேவை அளிக்க முடிவு செய்துள்ளது.
இதன் படி மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் ஷில்லாங் ஆகிய பகுதிகளில் இருந்து சேவையைத் துவங்க உள்ளது. இதனுடன் 4 நகரங்களின் அருகில் இருக்கும் சிறு நகரங்களையும் இணைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் பயணம்
இதுகுறித்து ஜி.ஆர்.கோபிநாத் கூறுகையில், டிசம்பர் 22ஆம் தேதி மும்பை முதல் நாசிக் வரையில் முதல் பயணத்தை ஏர் டெக்கான் இயக்க உள்ளது எனத் தெரிவித்தார்.
1 ரூபாய்
ஏர் டெக்கான் நிறுவனத்தின் ஆரம்பச் சலுகையாகச் சிலருக்கு 1 ரூபாய் பயணத்தையும் செய்ய வாய்ப்பு உள்ளது.
1,400 ரூபாய்
இந்நிறுவனத்தின் முதல் மும்பை முதல் நாசிக் வரையிலான 40 நிமிட பயணத்திற்கு 1,400 ரூபாய் வரையில் டிக்கெட் விலை இருக்கும். சாலை வழியில் இந்தப் பயணத்திற்கு 4 மணிநேரம் தேவை.
மேலும் மத்திய அரசு உதான் திட்டத்தின் 2,500 ரூபாய் டிக்கெட் விலையை விடவும் ஏர் டெக்கான் குறைவான கட்டணத்தையே வசூலிக்கிறது.
தினசரி பயணம்
ஏர் டெக்கான் முதல்கட்டமாக நாசிக், புனே, மும்பை, ஜால்குவான் ஆகிய நகரங்கள் மத்தியில் தினசரி பயணச் சேவையை அளிக்க உள்ளது.
ஜனவரியில் விரிவாக்கம்
தற்போது மும்பையில் இருந்து சேவை அளிக்கப்படும் நிலையில், ஜனவரியில் இருந்து டெல்லியை மையமாக ஆக்ரா, சிம்லா, லூதியானா, பட்நகர், தேராடன் மற்றும் குலு ஆகிய பகுதிகளுக்கும் சேவையை விரிவாக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட உள்ளது.


Click it and Unblock the Notifications