இந்தியாவில் தற்போது நடப்பு கணக்குப் பற்றாக்குறை மற்றும் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ள வர்த்தகச் சந்தை நிலையில், 2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் நாட்டின் பொருளாதாரத்தை மாற்றி அமைக்கப்போகும் சீர்திருத்த மறுமலர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்படுமா அல்லது நடுத்தர மற்றும் ஊரக வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
தேர்தல்கள்
2018ஆம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 8 மாநிலங்களில் அதாவது திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து, கர்நாடகா, மிசோரம், சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் மட்டும் முழுமையான ஆதிக்கத்துடன் பிஜேபி கட்சியின் ஆட்சி நடைபெறுகிறது.
வெற்றி
இந்நிலையில் இந்த 8 மாநில தேர்தலில் வெற்றிபெறுவது மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான பிஜேபி கட்சிக்கு முக்கியக் குறிக்கோளாக இருக்கும் எனத் தெரிகிறது.
இதனால் சாமானிய மக்களைக் கவரும் வகையில் முக்கியமான திட்டங்கள் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்படும் எனவும் தெரிகிறது.
ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயம்
கடந்த நிதியாண்டில் மேக் இன் இந்தியா, வளர்ச்சி திட்டங்கள், உள்கட்டுமான திட்டங்கள் எனப் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டும் நாட்டின் பொருளாதாரம் பெரிய அளவிலான வளர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஊரக வளர்ச்சியின் மீது மத்திய அரசு அதிகளவிலான கவனத்தைச் செலுத்தும் அதிகளவில் நம்பிக்கை கிடைத்துள்ளது.
3 முக்கிய மாநிலங்கள்
2018இல் தேர்தல் நடைபெறும் 8 மாநிலங்களில் மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் அதிகளவில் விவசாயத்தை நம்பி இயங்கும் மக்களைக் கொண்டுள்ளது.
இதனால் 8 மாநிலங்களின் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்னும் காரணத்திற்காகவே சாமானியர்கள் பயன் பெறும் வகையில் அதிகளவிலான திட்டங்கள் அறிவிக்கப்படும் என ஆய்வுகள் கூறுகிறது.
70 சதவீத மக்கள் தொகை
இந்திய மக்கள் தொகையில் 70 சதவீதம் பேர் சாமானியர்கள் எனக் கூறப்படும் நடுத்தரப் பிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கு அளிக்கப்படும் நலத் திட்டங்கள் பெரும் பகுதி மக்களுக்கு அதிகளவிலான லாபத்தை அளிப்பதாக அமையும்.


Click it and Unblock the Notifications