இந்திய வங்கிகளில் இருக்கும் வராக்கடன் பட்டியலில் தற்போது முக்கியப் பிரச்சனையாக இருப்பது வீடியோகான் குழுமத்தின் 20,000 கோடி ரூபாய் கடன் தான். காரணம் இந்நிறுவனத்தின் வர்த்தகம் தற்போது அதிகளவில் குறைந்துள்ள காரணத்தால் கடன் நிலுவை தீர்ப்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது.
இந்நிலையில் வீடியோகான் குழுமத்தின் தலைவர் வேணுகோபால் தூத் கடனை அடைக்க முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறியதாகத் தகவல் வெளியானது.
அபத்தமானது..
இந்தியாவை விட்டு வெளியேறும் எண்ணம் எனக்கு இல்லை, சொல்லப்போனால் எனக்கு மிகவும் வசதியானது. கடந்த 3 வருடமாக நான் இந்தியாவை விட்டு வெளியேறியதில்லை.
இந்நிலையில் நான் நாட்டை விட்டு வெளியேறிவிட்டேன் என்ற செய்திகள் மிகவும் அபத்தமானது என வேணுகோபால் தூத் தெரிவித்துள்ளார்.
பலர்..
ஜத்தின் மேத்தா, விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெஹூல் சோக்சி உட்படப் பலர் இந்திய வங்கிகளில் கடனை பெற்றுத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இந்நிலையில் 20,000 கோடி ரூபாய் கடன் நிலுவை வைத்துள்ள வேணுகோபால் தூத்-ம் நாட்டை விட்டு வெளியேறியதாக வந்த தகவல் தீயாய் பரவியது.
திருப்பிச் செலுத்துவேன்
தான் இந்தியாவை விட்டு வெளியேறியதாக வந்த செய்திகளை அடுத்து வேணுகோபால் தூத், வங்கியில் பெற்றுள்ள கடனை ஒரு பைசா கூட மீதமில்லாமல் திருப்பிச் செலுத்துவேன் எனத் தெரிவித்துள்ளார்.
திவால்
டிசம்பர் 31 வரையில் வீடியோகான் குழுமம் தனது கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், ஜனவரி மாதம் இந்த நிறுவனத்தில் கடன் கொடுத்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வீடியோகான் நிறுவனத்தைத் திவாலாக அறிவிக்கும் பணிகளைத் துவங்கியது.
மேலும் இக்குழுமத்தின் கீழ் இருக்கும் அனைத்துக் கிளை நிறுவனங்களையும் கணக்கில் கொள்ளப்பட்ட கடன் தொகைக்கான தீர்வைக் கொண்டு வர ஆய்வு செய்து வருகிறது.
முக்கியத் துறை
வீடியோகான் குழுமம் தற்போது உற்பத்தி, நுகர்வோர் பொருட்களின் விற்பனை, விநியோகம் பிரிவில் இயங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications